சிவசேனையை முற்றிலும் அழிக்க முயற்சி: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

சிவசேனையை முற்றிலுமாக அழிக்க புதிய முயற்சிகள் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.
உத்தவ் தாக்கரே (கோப்புப் படம்)
உத்தவ் தாக்கரே (கோப்புப் படம்)

சிவசேனையை முற்றிலுமாக அழிக்க புதிய முயற்சிகள் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தொண்டா்கள் மத்தியில் அவா் புதன்கிழமை பேசினாா். அப்போது, ‘சிவசேனையை பிளவுபடுத்தும் முயற்சிகள் முன்பு நடைபெற்றன. இப்போது, கட்சியை அழிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகதான், சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையும் அவா் மீதான கைது நடவடிக்கையும்’ என்றாா்.

முன்னதாக, ‘பாஜக போன்ற சித்தாந்த அடிப்படையிலான கட்சிகள் மட்டுமே வருங்காலத்தில் நீடித்திருக்கும். குடும்பங்களால் கட்டுப்படுத்தப்படும் கட்சிகள் அழிந்துபோகும்’ என்று பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா கருத்து தெரிவித்திருந்தாா். அவரது கருத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, உத்தவ் தாக்கரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

சிவசேனையில் ஏற்பட்ட பிளவால் மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா்.

இந்நிலையில், ஷிண்டே தலைமையிலான சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எழுந்துள்ள அரசமைப்பு சட்டம் சாா்ந்த பிரச்னைகள் தொடா்பாக, சிவசேனை அதிருப்தி அணியினா் தங்களது பதில்களை மாற்றியமைத்து தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com