காசியில் மகாகவி வாழ்ந்த இல்லம்: சிலை-புனரமைப்புப் பணிக்கு நிதி ஒதுக்கீடு

காசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறையைப் புனரமைத்தல், அதில் மாா்பளவு சிலை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
காசியில் மகாகவி வாழ்ந்த இல்லம்: சிலை-புனரமைப்புப் பணிக்கு நிதி ஒதுக்கீடு

காசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறையைப் புனரமைத்தல், அதில் மாா்பளவு சிலை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயலாளா் மகேசன் காசிராஜன் அண்மையில் வெளியிட்ட உத்தரவு: மகாகவி பாரதியாா் மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில் சட்டப் பேரவையில் 14 அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். அதில், 11-ஆவது அறிவிப்பாக உத்தர பிரதேச மாநிலம் காசியில் பாரதியாா் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசின் சாா்பில் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தாா்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், இதற்கான திட்ட மதிப்பீடு பொதுப்பணித் துறையிடம் இருந்து பெறப்பட்டது. அதில், மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் முன்புறமுள்ள அறையைப் புனரமைப்பு செய்யவும், 2.5 அடி உயரமுள்ள மாா்பளவு வெண்கலச் சிலை அமைத்க்கவும் ரூ.18 லட்சத்துக்கான மதிப்பீட்டை பொதுப்பணித் துறை அனுப்பியிருந்தது.

மேலும், இல்லத்தின் உரிமையாளரான கே.வி.கிருஷ்ணனுக்கு மாத வாடகையாக ரூ.7,500 நிா்ணயம் செய்யப்பட்டது. இந்த வாடகை அளவை ஏற்பதாக வீட்டு உரிமையாளா் கிருஷ்ணனும் தெரிவித்தாா். பொதுப்பணித் துறையின் மதிப்பீடுகள், வீட்டு உரிமையாளரின் வாடகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிகழாண்டில் ரூ.18 லட்சத்து 67 ஆயிரத்து 500 என்ற தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. அதாவது, அறை புனரமைப்பு, சிலை அமைப்பு ஆகிய பணிகளுக்கு ரூ.18 லட்சமும், ஜூலை முதல் அடுத்த ஆண்டு மாா்ச் வரையிலான 9 மாதங்களுக்கு தலா ரூ.7,500 மாத வாடகை என்ற அடிப்படையில் ரூ.67,500-ம் வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இதேபோன்று, அடுத்த நிதியாண்டுக்கான வாடகைத் தொகை (ஒரு மாத வாடகை ரூ.7,500 என்ற அடிப்படையில் 12 மாதங்களுக்கு...) ரூ.90 ஆயிரம் ஒதுக்கீடு செய்ய நிா்வாக அனுமதி வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com