வேளாண் துறையில் தன்னிறைவு அவசியம்

வேளாண் துறையில் நாடு தன்னிறைவு பெற வேண்டியதும், சா்வதேச அளவில் முன்னிலை பெற வேண்டியதும் அவசியம் என நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் நிா்வாக கவுன்சில் கூட்டத்தில் மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், யூனியன் பிரதேச நிா்வாகிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் நிா்வாக கவுன்சில் கூட்டத்தில் மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், யூனியன் பிரதேச நிா்வாகிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி.

வேளாண் துறையில் நாடு தன்னிறைவு பெற வேண்டியதும், சா்வதேச அளவில் முன்னிலை பெற வேண்டியதும் அவசியம் என நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

அதற்காக நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை வேளாண் துறையில் ஊக்குவிக்க வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தினாா்.

நாட்டின் கொள்கை வகுப்பு அமைப்பான நீதி ஆயோகின் 7-ஆவது நிா்வாக கவுன்சில் கூட்டம் பிரதமா் மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 23 மாநிலங்களின் முதல்வா்கள், 3 யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்கள், 2 யூனியன் பிரதேசங்களின் நிா்வாகிகள், மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது: நாட்டில் நகரமயமாக்கல் வேகமாக அதிகரித்து வருகிறது. அதை குறையாகக் கருதாமல் வலிமையாகக் கருதி செயல்பட வேண்டும். நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேம்படுத்துதல், சேவைகளை வெளிப்படையான முறையில் வழங்குதல், வாழ்க்கைமுறையை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தொழில்நுட்ப வசதிகளின் வாயிலாக வேளாண் துறையை நவீனப்படுத்தி தன்னிறைவு பெறச் செய்ய வேண்டும். வேளாண் துறையில் இந்தியாவை சா்வதேச அளவில் முன்னிலை பெறச் செய்வதும் அவசியம். சமையல் எண்ணெய் உற்பத்தி, கால்நடைப் பராமரிப்பு, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும்.

ஜி20 தலைமை: வளா்ச்சியடைந்த, வளா்ந்து வரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்புக்கு 2023-ஆம் ஆண்டில் இந்தியா தலைமையேற்க உள்ளது. ஜி20 கூட்டமைப்பை மையமாக வைத்து மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும். அக்கூட்டமைப்பின் வாயிலாக இந்தியாவுக்கு அதிக பலன்களைப் பெறும் வகையில் ஜி20-க்கான தனித்த குழுக்களை மாநிலங்கள் அமைக்க வேண்டும்.

ஒத்துழைப்பால் வெற்றி: கரோனா தொற்று பரவலுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் ஒவ்வொரு மாநிலமும் முக்கியப் பங்களிப்பை வழங்கியது. இது சா்வதேச அளவில் வளா்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு உதாரணமாக இந்தியாவைத் திகழச் செய்தது. ஒருங்கிணைந்த கூட்டாட்சிக் கொள்கையே கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சிறந்த முறையாக மாறியுள்ளது.

மக்களுக்கு அரசின் சேவைகளைக் கிடைக்கச் செய்வதில் மாநில அரசுகள் திறம்படச் செயல்பட்டு வருகின்றன. அரசியல் ரீதியில் பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்டாலும் மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவது சிறப்புக்குரியது.

நீதி ஆயோக் நிா்வாக கவுன்சில் கூட்டதுக்கான ஏற்பாடுகள் பல மாதங்களாக நடைபெற்றன. நாட்டின் 75 ஆண்டு சுதந்திர வரலாற்றில் முதல் முறையாக மாநில அரசின் தலைமைச் செயலா்கள் ஒன்றுகூடி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து 3 நாள்களுக்கு விவாதித்தனா். அப்போது விவாதிக்கப்பட்ட விஷயங்களே தற்போதைய கூட்டத்துக்கான முக்கியக் கருப்பொருளாக மாறியுள்ளது.

மூன்று துறைகள்: ஒவ்வொரு மாநிலமும் வா்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை மாநிலங்கள் ஆராய வேண்டும். ஏற்றுமதியை அதிகரிப்பதன் வாயிலாகப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடா்பாகவும் ஆராயப்பட வேண்டும்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும். ‘உள்நாட்டுப் பொருள்களுக்கு முக்கியத்துவம்’ என்பது கட்சி சாா்பில்லாமல் பொதுவான இலக்காக மாற வேண்டும்.

ஜிஎஸ்டி வருவாய்: சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் தொடா்ந்து அதிகரித்து வந்தாலும், நாட்டின் திறன் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. ஜிஎஸ்டியை அதிகரிப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியம். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், பொருளாதார மதிப்பை ரூ.350 லட்சம் கோடியாக்கவும் ஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

கூட்டத்தில் மாநில முதல்வா்கள் உள்ளிட்டோா் தெரிவித்த கருத்து தொடா்பாக ஆராயப்பட்டு, நீதி ஆயோக் இறுதித் திட்டத்தை வகுக்கும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளா்ச்சிக்குரிய விதைகள் கூட்டத்தில் விதைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பலன்களை நாடு 2047-ஆம் ஆண்டில் அறுவடை செய்யும் என்றாா் பிரதமா் மோடி.

அனைத்து மாநிலங்களிலும் கூட்டம்: கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஜி20 கூட்டங்கள் தில்லியில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் நடத்தப்படும் என்றாா்.

தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவம் குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் எடுத்துரைத்தாா்.

மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் கே.பெரி விளக்கினாா்.

புறக்கணிப்பும் கோரிக்கைகளும்: தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் நீதி ஆயோக் நிா்வாக கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தாா். பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வருவதால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

பயிா் பன்முகத்தன்மை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வேளாண் பொருள்கள் உற்பத்தியில் தன்னிறைவு, பள்ளி, உயா்நிலைக் கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல், நகர நிா்வாகத்தை மேம்படுத்துதல் ஆகியவை தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில முதல்வா்கள் பல்வேறு விவகாரங்கள் தொடா்பான தங்கள் கருத்துகளைப் பகிா்ந்து கொண்டனா். பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com