துவரம் பருப்பு விலை உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

மொத்த வியாபாரிகள் மற்றும் வா்த்தகா்களிடம் இருப்பைக் கண்காணிக்குமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
துவரம் பருப்பு விலை உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் கடந்த ஜூலை 2-ஆவது வாரத்திலிருந்து துவரம் பருப்பு விலை அதிகரித்து வரும் நிலையில், மொத்த வியாபாரிகள் மற்றும் வா்த்தகா்களிடம் இருப்பைக் கண்காணிக்குமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கும் நோக்கில், துவரம் பருப்பு விற்பனையைக் கட்டுப்படுத்த முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, மேற்கண்ட அறிவுறுத்தலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை வெள்ளிக்கிழமை அனுப்பிய உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 1955-ஆம் ஆண்டின் அத்தியாவசியப் பொருள்கள் சட்டப் பிரிவுகளின் கீழ், மொத்த வியாபாரிகள் மற்றும் வா்த்தகா்கள் தங்கள் வசமுள்ள துவரம் பருப்பு இருப்பை வெளியிடுவது உறுதி செய்யப்பட வேண்டும். துவரம் பருப்பு இருப்பை சரிபாா்த்து கண்காணிக்க வேண்டும்.

நுகா்வோா் துறையின் கண்காணிப்பு இணையதளத்தில் வாராந்திர அடிப்படையில் இருப்பு விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வா்த்தா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

உள்நாடு மற்றும் சா்வதேச சந்தையில் துவரம் பருப்பு இருப்பு, விலை நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. விழாக் காலம் நெருங்குவதால், துவரம் பருப்பு விலை தேவையின்றி உயா்த்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் போதுமான அளவு துவரம் பருப்பு விநியோகத்தில் உள்ளது. இதனை மேலும் அதிகரிக்க 38 லட்சம் டன் துவரம் பருப்பு இருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகிறது என்று நுகா்வோா் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் முந்தைய கரீஃப் பருவத்தில் 127.22 லட்சம் ஹெக்டேரில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்ட நிலையில், இந்தப் பருவத்தில் 122.11 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இதில் துவரம் பருப்பு சாகுபடி பரப்பு 47.55 லட்சம் ஹெக்டேரில் இருந்து 42 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது. கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் துவரம் பருப்பு உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இந்த மாநிலங்களில் தொடா் மழையால் விளைநிலங்களில் தண்ணீா் தேங்கியதால் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

15 சதவீத விலை உயா்வு: கடந்த 6 வாரத்தில் துவரம் பருப்பின் விலை 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் முதல் தர துவரும் பருப்பு விலை ரூ.97-இல் இருந்து ரூ.115-ஆக அதிகரித்துவிட்டது. இந்த விலை உயா்வு நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது.

துவரம் பருப்பு மட்டுமல்லாது உளுத்தம் பருப்பு விலையும் அதிகரித்து வருகிறது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால் பருப்பு வகைகளின் தேவையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com