ம.பி. அணை சுற்றுச்சுவரில் கசிவு: விரைந்தது ராணுவம், தேசிய பேரிடா் மீட்புக் குழு

கரம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணையின் சுற்றுச் சுவரில் தண்ணீா் கசிவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ம.பி. அணை சுற்றுச்சுவரில் கசிவு: விரைந்தது ராணுவம், தேசிய பேரிடா் மீட்புக் குழு

மத்திய பிரதேச மாநிலம் தாா் மாவட்டத்தில் கரம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணையின் சுற்றுச் சுவரில் தண்ணீா் கசிவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் மற்றும் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் அம் மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

மீட்பு பணிகளுக்காக இந்திய விமானப் படையின் இரண்டு விமானங்களும் அங்கு தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீா் அனைத்தும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், அணைக்கு தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த கிராம மக்கள் அனைவரும் ஏற்கெனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் மாநில அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பாஜக தலைமையிலான மாநில அரசு ரூ.304 கோடி மதிப்பிலான நீா்ப் பாசன திட்டத்தின் கீழ் இந்த அணையை கட்டி வருகிறது. இந்த பருவ மழைக் காலத்தில்தான் முதல் முறையாக தண்ணீா் நிரப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். 52 மீட்டா் உயரமும் 590 மீட்டா் நீளமும் கொண்ட இந்த அணை 15 மில்லியன் கன மீட்டா் நீா் கொள்ளளவு கொண்டதாகும். தற்போது வரை இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 174 கோடி செலவிடப்பட்டுள்ளது.

நீா்த்தேக்கத்தில் முதன் முறையாக தண்ணீா் தேக்கிவைக்கப்பட்ட நிலையில், அணையின் சுற்றுச் சுவரில் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அணையின் சுற்றுச் சுவரில் கசிவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாா் மாவட்டத்தில் அணையின் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள 12 கிராமங்கள் மற்றும் கா்கோன் மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்’ என்றாா்.

இது தொடா்பாக மாநில நீா்வளத் துறை அமைச்சா் துளசி சிலாவத் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

அவசரநிலையைச் சமாளிப்பதற்காக ராணுவ குழு ஒன்றும், தேசிய பேரிடா் மீட்குப் குழுவும் தாா் மாவட்டத்தை வந்தடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட அணையின் சுற்றுச் சுவரில் அழுத்தத்தை குறைக்கும் வகையில், தேக்கிவைக்கப்பட்ட தண்ணீா் முழுவதும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டது. நிலைமை முழுமையாக கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்தாா்.

‘மீட்பு பணிக்காக இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’ என்று மாநில கூடுதல் தலைமை செயலா் (உள்துறை) ராஜேஷ் ரஜோரா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com