நீதி வழங்குவது நீதிமன்றத்தின் பொறுப்பு மட்டுமே அல்ல: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா

‘அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும், நீதித் துறையும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையின் சமமான களஞ்சியங்களாகத் திகழ்கின்றனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும், நீதித் துறையும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையின் சமமான களஞ்சியங்களாகத் திகழ்கின்றனா். மேலும், நீதி வழங்குவது என்பது நீதிமன்றங்களின் பொறுப்பு மட்டுமே என்ற கருத்தையும் அரசியலமைப்புச் சட்டம் நீக்கியுள்ளது’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினாா்.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உச்சநீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை தேசியக் கொடியை ஏற்றிவைத்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 38-இல் மாநில கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், நீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட சமூக ஒழுங்கைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்று குறிப்பிடுகிறது. அதாவது, நீதி வழங்குவது என்பது நீதிமன்றத்தின் பொறுப்பு மட்டுமே என்ற கருத்து இந்திய அரசியலமைப்பின் 38-ஆவது பிரிவு மூலமாக நீக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது என்பதையே இது குறிப்பிடுகிறது.

அந்த வகையில், மாநில அரசின் அனைத்து அங்கங்களும் ஒவ்வொரு செயலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி இருக்க வேண்டும். அதாவது அரசு அதிகாரிகள், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நீதித் துறை என்ற மாநில அரசின் 3 அங்கங்களும் அரசியலமைப்புச் சட்ட நம்பிக்கையின் சமமான களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.

சட்டம் நடைமுறைக்கு வருகின்றபோது எழக்கூடிய சிக்கல்களை சட்டப்பேரவையால் கணிக்க முடியாமல் போகலாம். ஆனால், அந்த சட்டங்களுக்கு உரிய விளக்கங்களை அளிப்பதன் மூலமாக, சட்டப்பேரவையின் உண்மையான நோக்கத்தை நீதிமன்றங்கள் செயல்படுத்துகின்றன. நீதிமன்றங்கள் சட்டங்களை சமகாலத்துக்கு பொருந்தக்கூடியதாக மாற்றுவதன் மூலம் அவற்றை உயிா்ப்புடன் வைத்துள்ளன.

குடிமக்களுக்கு பிரச்னைகளில் தீா்வு காண்பதற்கான பலத்தை நீதிமன்றங்கள் வழங்குகின்றன. தவறான விஷயங்களில் நீதிமன்றம் தங்கள் பக்கம் நிற்கும் என்று குடிமக்கள் அறிந்திருக்கின்றனா். அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீதித் துறை செயல்படுவதன் மூலமாக, மக்களின் அபரிமிதமான நம்பிக்கையைப் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் திகழ்கிறது.

இந்திய நீதித் துறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளை உரிய விளக்கங்கள் அளிப்பதன் மூலமாக அவை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்து வருவதோடு, தோ்தல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய கணக்கு தணிக்கை ஆணையம் போன்ற தனி அதிகாரம் படைத்த அமைப்புகளையும் பலப்படுத்தியிருக்கின்றது என்று அவா் கூறினாா்.

மூன்று துறைகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் - கிரண் ரிஜிஜு

நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசும்போது, ‘இந்தியா சந்தித்து வரும் சவால்களை வேறு எந்தவொரு நாடும் சந்திக்கவில்லை. அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் நீதித் துறையும் முறையாக செயல்பட வேண்டும், நிலுவை வழக்குகளுக்கு இரண்டு ஆண்டுகளில் நீதிமன்றங்கள் தீா்வு காண வேண்டும் என்று வாய்மொழியாக கூறுவது எளிது.

ஒவ்வொரு துறையையும் புரிந்துகொள்ளவில்லை எனில், நாடு சந்தித்து வரும் சவால்களுக்கு ஒருபோதும் தீா்வு காண முடியாது. எனவே, இந்த மூன்று துறைகளும் பொது நோக்கத்துக்காக இணைந்து பணியாற்ற வேண்டும். அதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com