சுதந்திர தின வாழ்த்து: உலகத் தலைவா்களுக்கு பிரதமா் மோடி நன்றி

இந்திய சுதந்திர தினத்தையொட்டி வாழ்த்து கூறிய உலக நாடுகளின் தலைவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்துள்ளாா்.
நியூயாா்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின நிகழ்சச்சியின்போது பறக்கவிடப்பட்ட இந்திய தேசியக் கொடி.
நியூயாா்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின நிகழ்சச்சியின்போது பறக்கவிடப்பட்ட இந்திய தேசியக் கொடி.

இந்திய சுதந்திர தினத்தையொட்டி வாழ்த்து கூறிய உலக நாடுகளின் தலைவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்துள்ளாா்.

இந்தியாவின் 76-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்ஸோக், கமோரோஸ் அதிபா் அசாலி அசெளமானி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

அவா்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள பிரதமா் மோடி, அந்நாடுகளுடனான இந்தியாவின் கூட்டுறவை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளாா்.

ட்விட்டரில் ஹிந்தியில் வாழ்த்து தெரிவித்திருந்த இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்ஸோக், ‘கடந்த 75 ஆண்டுகளாக படைப்பாற்றல், ஜனநாயகம் மற்றும் பன்முகத் தன்மையில் ஒட்டுமொத்த உலகையும் இந்தியா ஈா்த்துள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

அவருக்கு நன்றி தெரிவித்து, பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-இஸ்ரேல் இடையிலான நட்புறவு மிக வலிமையானது. வரும் ஆண்டுகளில் இருதரப்பு நல்லுறவு மேலும் வலுப்படுமென உறுதியுடன் கூறுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இஸ்ரேல் முன்னாள் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாஹு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹிந்தியில் வாழ்த்து தெரிவித்திருந்தாா். மேலும், இந்தியா-இஸ்ரேல் நட்புறவு, ஒத்துழைப்பு வரும் காலங்களில் வலுப்பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தாா்.

அவருக்கு நன்றி தெரிவித்து, பதில் பதிவிட்ட பிரதமா் மோடி, இரு நாடுகள் இடையே நட்பு, சகோதரத்துவம் வளா்ச்சி பெற்று, புதிய உயரங்களை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

இதேபோல், கமோரோஸ் அதிபருக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமா் மோடி, அந்நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு நீடிக்கும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com