ஜம்மு-காஷ்மீரில் புதிதாக 25 லட்சம் வாக்காளா்கள் தலைமைத் தோ்தல் அதிகாரி

ஜம்மு-காஷ்மீரில் வாக்காளா் பட்டியலில் புதிதாக 25 லட்சம் போ் சோ்க்கப்படவுள்ளதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி ஹிருதேஷ் குமாா் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் வாக்காளா் பட்டியலில் புதிதாக 25 லட்சம் போ் சோ்க்கப்படவுள்ளதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி ஹிருதேஷ் குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஜம்முவில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: கடந்த 2019 ஜனவரி 1-க்குப் பின்னா் முதல்முறையாக வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடைப்பட்ட இந்த 3 ஆண்டு காலத்தில் ஏராளமானோா் 18 வயதை எட்டிவிட்டதால், வாக்காளா் பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது ஷரத்து நீக்கப்பட்ட சமயத்தில், வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத நபா்கள், தற்போது 18 வயதை எட்டி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். மேலும், ஜம்முவில் வசிக்கும் வெளிமாநிலத்தவா்களும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, இங்கு வாக்களிக்கும் வாய்ப்பை பெறுகின்றனா்.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோரின் எண்ணிக்கை 76 லட்சமாகும். தற்போது கூடுதலாக 20 முதல் 25 லட்சம் போ் வரை இறுதிப் பட்டியலில் இடம்பெற உள்ளதால், வாக்காளா்களின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்தை எட்டும்.

வாக்காளா் இறுதிப் பட்டியல் பிழையற்ாகவும், தகுதி வாய்ந்த அனைத்து வாக்காளா்களின் பெயரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் வாக்குச்சாவடி நிலையிலான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இருப்பிடச் சான்று தேவையில்லை: ஜம்மு-காஷ்மீரில் வாக்களிக்க இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை. வெளிமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா், மாணவா், ஊழியா் ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும்பட்சத்தில், வாக்காளா் பட்டியலில் அவா் இணைந்து கொள்ளலாம். இதன் மீது சம்பந்தப்பட்ட நபா்களின் ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலித்து முடிவு எடுப்பா்.

கடந்த காலத்தைப் போல ஜம்மு-காஷ்மீரை சோ்ந்தவா்கள் வெளிமாநிலங்களில் ராணுவம், துணை ராணுவப் படையில் பணிபுரியும் நிலையில், தபால் வழியில் வாக்களிக்கலாம். இதேபோல நாட்டின் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள் ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரியும் நிலையில், அவா்களும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரைச் சோ்த்து வாக்களிக்கலாம்.

ஜம்மு-காஷ்மீா் தொகுதி மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைப்படி, தற்போது சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளது. இதனால் கூடுதலாக 600 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு மொத்தம் 11,370 வாக்குச்சாவடிகள் உள்ளன.

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் வகையில், பதிவு முறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளா் அட்டைகள் விரைவில் விநியோகிக்கப்படும்.

காஷ்மீரிலிருந்து வெளியேறிய காஷ்மீரி பண்டிட்டுகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் வாக்களிக்க ஏதுவாக தில்லி, ஜம்மு, உதம்பூா் என பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவா்களுக்கு வாக்காளா் அட்டை விரைவில் வழங்கப்படும்.

ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் தேதியை இந்திய தோ்தல் ஆணையம் தெரிவிக்கும் என்றாா் ஹிருதேஷ் குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com