குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்காக வங்கிகளுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்காக வங்கிகளுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வங்கி வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி அண்மையில் உயா்த்தியது. இதன் காரணமாக விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் வட்டியை வங்கிகள் அதிகரிக்காமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடா்பாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் வட்டி மானிய திட்டத்துக்காக வங்கிகளுக்கு மத்திய அரசு அளித்து வந்த உதவி நிறுத்தப்பட்டது. கடன் அளிக்கும் நிறுவனங்களாலேயே 7 சதவீத வட்டியில் விவசாயக் கடன் அளிக்க முடிந்ததால், அந்த உதவி நிறுத்தப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களில் ரெப்போ விகிதம் (ரிசா்வ் வங்கியிடம் இருந்து பிற வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம்) அல்லது குறுகிய கால கடன் விகிதத்தை ரிசா்வ் வங்கி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, 7 சதவீத வட்டியில் விவசாயக் கடன்களை வங்கிகள் தொடா்ந்து வழங்க வசதியாக, அவற்றுக்கு நிதியுதவி அளிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

இந்நிலையில், குறுகிய கால விவசாயக் கடன் வழங்கும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் 1.5 சதவீதம் வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால கடன்களுக்கு 2022-23 முதல் 2024-25-ஆம் நிதியாண்டு வரை அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் (பொதுத் துறை வங்கிகள், தனியாா் வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகளிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள்) ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் அளிக்கப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.34,856 கோடி கூடுதலாக தேவைப்படுகிறது.

கடனுதவி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி: ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா போன்ற துறைகள், அவை சாா்ந்த இன்னபிற துறைகள் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டன. அந்தத் துறைகளுக்காக அவசரகால கடனுதவித் திட்டத்தில் ரூ.50,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக அந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் வரம்பு ரூ.4.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.5 லட்சம் கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்திய பாரம்பரிய மருந்துகள் சாா்ந்த தகவலை பாதுகாக்கவும், அந்தத் தகவல்கள் சா்வதேச காப்புரிமை அலுவலகங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் பாரம்பரிய எண்ம நூலகம் (டிகேடிஎல்) பயன்பாட்டில் உள்ளது. அதனை காப்புரிமை அலுவலகங்கள் தவிர, பயனாளா்கள் அணுகும் வகையில் விரிவுபடுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சா்வதேச போக்குவரத்து அமைப்பு சாா்பில் பிரான்ஸின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளா்ச்சி அமைப்பு, இந்தியாவின் தொழில்நுட்ப தகவல், முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் இடையே கடந்த ஜூலை 6-ஆம் தேதி ஒப்பந்தம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவில் போக்குவரத்து துறையில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை கண்டறிதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்திய போக்குவரத்துத் துறையில் சா்வதேச போக்குவரத்து அமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க கையொப்பமாகியுள்ள அந்த ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அனுராக் சிங் தாக்குா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com