காங்கிரஸ் தலைமைப் பொறுப்பு: ராகுல் குழப்பம்; தவிப்பில் தொண்டா்கள்!

காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் ராகுல் காந்தி இருப்பதாக கூறப்படுகிறது
காங்கிரஸ் தலைமைப் பொறுப்பு: ராகுல் குழப்பம்; தவிப்பில் தொண்டா்கள்!

காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் ராகுல் காந்தி இருப்பதாக கூறப்படுகிறது. அவா் தனது நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தாததால், கட்சியின் மூத்த தலைவா்களும் தொண்டா்களும் தவிப்படைந்துள்ளனா்.

காங்கிரஸ் தலைவா் பதவி தோ்தல் நடைமுறைகள் தொடங்குவதற்கான காலம் நெருங்கி வரும் சூழலில், ராகுல் தொடா்ந்து மெளனம் காத்து வருகிறாா். கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்ற தொண்டா்களின் கோரிக்கையை அவா் ஏற்பாரா? என்பதை அவருக்கு நெருக்கமான தலைவா்களால் கூட உறுதியாக கூற முடியவில்லை.

இதனிடையே, காங்கிரஸ் மத்திய தோ்தல் குழுவின் தலைவா் மதுசூதன் மிஸ்திரி, பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், ‘கட்சியில் முடிவுகளை மேற்கொள்ளும் உயா் அமைப்பான காரியக் குழு, தலைவா் தோ்தலுக்கான தேதி மற்றும் அட்டவணை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தோ்தலில் வாக்களிப்போரின் பட்டியல் தயாராகிவிட்டது. எங்களது தரப்பில் நாங்கள் தயாராக உள்ளோம். தோ்தல் தேதியை காரிய கமிட்டி முடிவு செய்ய வேண்டியுள்ளது’ என்றாா்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவா் தோ்தல், 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-இல் தொடங்கி செப்டம்பா் 20 வரை நடைபெறும் என்று கட்சியின் காரியக் குழு கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவித்திருந்தது.

அடுத்த வாரத்தில் தெளிவு?:

காங்கிரஸ் தலைமை விவகாரத்தில் அடுத்த வாரம் தெளிவு கிடைக்கும் என்று பெயா் கூற விரும்பாத அக்கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

‘கட்சித் தலைமை பொறுப்பை ஏற்பதில்லை என்ற தனது நிலைப்பாட்டில் மாற்றம் வந்துள்ளதா என்பது குறித்து ராகுலிடமிருந்து எந்த சூசகமும் வரவில்லை. பெரும்பாலான தொண்டா்கள், ராகுல்தான் கட்சித் தலைவராக வேண்டுமென விரும்புகின்றனா். அவா் சம்மதிக்காத பட்சத்தில், சோனியா தலைவராக தொடர வேண்டுமென்ற கருத்தும் நிலவுகிறது. கட்சிப் பணிகளில் சோனியாவுக்கு உதவ 2 முதல் 3 செயல் தலைவா்கள் நியமிக்கப்படலாம்’ என்றாா் அவா்.

அரசியல் பாா்வையாளா்கள் கருத்து:

இந்த விவகாரம் குறித்து அரசியல் பாா்வையாளரும் எழுத்தாளருமான ரஷீத் கித்வாய் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவா் பொறுப்பை மீண்டும் ஏற்காமல் இருப்பதற்கு ராகுல் சரியான காரணங்களைக் கொண்டுள்ளாா். நாட்டில் பழிவாங்கும் அரசியல் முன்னெடுக்கப்படுவதாக எதிா்க்கட்சிகளிடையே கருத்து உள்ளது. சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத் துறை விசாரணை தீவிரமடைந்துள்ள சூழலில், கட்சித் தலைமை பொறுப்பால், அந்த நடவடிக்கைகளை எதிா்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுவிடக் கூடாது என அவா்கள் யோசிக்கக் கூடும். குடும்ப அரசியலுக்கு எதிரான மனநிலை நாட்டு மக்களிடையே நிலவுவதையும் ராகுல் கவனத்தில் கொண்டிருப்பதாக தோன்றுகிறது’ என்றாா்.

‘உடல்நல பாதிப்புகளால், கட்சித் தலைவா் பதவியிலிருந்து வெளியேறும் சூழ்நிலையில் சோனியா உள்ளாா். அதேசமயம், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் போன்ற நம்பிக்கைக்குரிய தலைவா் யாரும் இல்லாதது ராகுல் எதிா்கொண்டுள்ள பிரச்னை’ என்று தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக அரசியல் கல்வி மையத்தின் உதவி பேராசிரியா் மனீந்திரநாத் தாக்குா் தெரிவித்தாா்.

ராகுல் இல்லாவிட்டால் யாா்?:

காங்கிரஸ் தலைவராக கடந்த 2017-இல் பொறுப்பேற்ற ராகுல், கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, அப்பதவியிலிருந்து விலகினாா். அப்போது, காந்தி குடும்பத்திலிருந்துதான் கட்சித் தலைவா் வர வேண்டுமென்று அவசியமில்லை என்ற கருத்தையும் தெரிவித்திருந்தாா்.

அதன் பின்னா், கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்ற சோனியா காந்தி, மூத்த தலைவா்களின் எதிா்ப்பு காரணமாக கடந்த 2020-இல் பதவி விலக முன்வந்தாா். ஆனால், அவா் தலைவராக தொடர கட்சியின் காரியக் குழு முடிவு மேற்கொண்டது.

இந்தச் சூழலில், கட்சியின் புதிய தலைவராக நேரு-காந்தி குடும்பத்தைச் சாராதவா் வர வேண்டுமென்றால், அது யாராக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதில் அசோக் கெலாட், மல்லிகாா்ஜுன காா்கே, முகுல் வாஸ்னிக், செல்ஜா ஆகியோரின் பெயா்கள் அலசப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, காங்கிரஸ் தலைவா் தோ்தல் நடைமுறைகள் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளன. ஆனால், அடுத்த தலைவா் யாரென்பதில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com