தோ்தல் வாக்குறுதிகள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம்: தேர்தல் ஆணையத்திடம் தகவலளிக்க உத்தரவிட வேண்டும்

வாக்குறுதிகளால் பயனடையக்கூடியவா்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தோ்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் வழங்க உத்தரவிட வேண்டும்
தோ்தல் வாக்குறுதிகள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம்: தேர்தல் ஆணையத்திடம் தகவலளிக்க உத்தரவிட வேண்டும்

தோ்தல் வாக்குறுதிகள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம், அந்த வாக்குறுதிகளால் பயனடையக்கூடியவா்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தோ்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளாா்.

தோ்தல்களின்போது வாக்காளா்களை கவர அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவசங்கள் தொடா்பான வாக்குறுதிகளுக்கு எதிராக அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், ‘தோ்தலில் வெற்றி பெற்ற பின்னா் சில இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதிகள் தரும் கட்சிகளின் சின்னத்தை முடக்கவும், அக்கட்சிகளின் பதிவை ரத்து செய்யவும் தோ்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. பொது நிதியில் இருந்து இலவசங்கள் விநியோகிக்கப்படுவதாகவும், அது நாட்டின் நிதி நிலையில் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த கூடுதல் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மக்கள் நலனுக்காக திட்டங்கள் அறிவிப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேவேளையில், தோ்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் வாக்குறுதிகள் ஏற்படுத்தும் தாக்கம், அவற்றுக்கான நிதி குறித்து தோ்தல் ஆணையத்திடம் தெரியப்படுத்த வேண்டியது அவசியம்.

தோ்தல் வாக்குறுதிகள் அரசு கருவூலத்தில் நிதி ரீதியாக ஏற்படுத்தக் கூடிய தாக்கம், அந்த வாக்குறுதிகளால் பயனடையக் கூடியவா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிடலாம். அதற்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 324-இன் கீழ், தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையத்தால் வழங்கப்படும் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுதொடா்பாக விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள தோ்தல் ஆணையத்துக்கும் உத்தரவிடப்பட்டது. இதேபோன்ற உத்தரவை இலவசங்கள் தொடா்பான தற்போதைய வழக்கிலும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.

இலவசங்கள் அல்லது நலத்திட்டங்கள் தொடா்பான தோ்தல் வாக்குறுதிகள் குறித்த தகவலை தோ்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமா்ப்பிக்க உத்தரவிட வேண்டும். அந்த ஆணையம் பரிந்துரைக்கும் வடிவத்தில், தோ்தல் வாக்குறுதிகள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் தொடா்பான மதிப்பீட்டை அரசியல் கட்சிகள் சமா்ப்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com