அமைப்பு ரீதியிலான பிரச்னைகளைத் தீர்க்க பாஜகவில் மாற்றங்கள்

அமைப்பு ரீதியிலான பிரச்னைகளைத் தீர்க்கவும், அரசியல் சவால்களை எதிர்கொள்ளவும் பாஜகவின் பல்வேறு மாநிலப் பிரிவுகளில் முக்கியப் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 
அமைப்பு ரீதியிலான பிரச்னைகளைத் தீர்க்க பாஜகவில் மாற்றங்கள்

அமைப்பு ரீதியிலான பிரச்னைகளைத் தீர்க்கவும், அரசியல் சவால்களை எதிர்கொள்ளவும் பாஜகவின் பல்வேறு மாநிலப் பிரிவுகளில் முக்கியப் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
பாஜகவின் உயர் அதிகார அமைப்பான ஆட்சிமன்றக் குழுவில் அண்மையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அக்குழுவில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானும் நீக்கப்பட்டனர். எனினும் பல்வேறு சமூகங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கு குழுவில் இடமளிக்கப்பட்டது.
முதல் முறையாக அக்குழுவில் தற்போது உயர் ஜாதி அல்லாதவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். காலங்காலமாக நலிவடைந்தும் பின்தங்கியும் உள்ள சமூகங்களைச் சென்றடைய பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது.
அதற்கு முன்பாக, அமைப்பு ரீதியிலான பிரச்னைகளைத் தீர்க்கவும் அரசியல் சவால்களை எதிர்கொள்ளவும் பாஜகவின் பல்வேறு மாநிலப் பிரிவுகளில் முக்கியப் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. தற்போது கட்சியின் உத்தர பிரதேச கிளைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
அதேபோல் பிகார் மாநில பாஜகவிலும் சில புதுமுகங்கள் பொறுப்புக்கு கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது. அங்கு பாஜக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் அண்மையில் அக்கூட்டணியைவிட்டு விலகி ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணியில் இணைந்ததால் அரசியல் கணக்குகள் மாறியுள்ளன.
கடந்த சில வாரங்களில் மகாராஷ்டிரம், உத்தரகண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநில பாஜக பிரிவுகளுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். இதேபோல் உத்தர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநில பாஜக பிரிவுகளுக்கு முக்கிய பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டனர். இந்த மாநிலங்களில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றிகளைப் பெற்றது.
கர்நாடகம்: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பாரா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் வலுவாக உள்ள அந்த மாநிலத்தில் பொம்மையின் தலைமை குறித்து விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும், அங்கு தலைமை மாற்றம் செய்யப்படும் என்ற கருத்தை பாஜக மறுத்துள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த வலுவான லிங்காயத்து சமூகத் தலைவரான எடியூரப்பா அண்மையில் பாஜக ஆட்சிமன்றக் குழுவில் சேர்க்கப்பட்டார். 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு லிங் காயத்து சமூகத்தினரைக் கவரும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.
உத்தர பிரதேசம்: உத்தரப் பிரதேச பாஜக தலைவராக ஸ்வந்திர தேவ் சிங் நியமிக்கப்பட்டது மண்டல மற்றும் ஜாதிய கணக்குகளை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக கட்சித் தலைவர் ஒருவர் கூறுகையில் "உத்தர பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்புக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு இருப்பதற்கு கட்சியின் தேசியத் தலைமை எப்போதும் முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது' என்றார்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த 2021-இல் நடைபெற்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல்வர் ஆதித்யநாத்தின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. அங்கு தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து பராமரிக்க பாஜக தீர்மானித்துள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலைவரான சுனில் பனசால்  தற்போது பாஜகவின் தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸô மாநில மேலிடப் பார்வையாளாரக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாநிலங்களில் தற்போது பிராந்திய கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க பாஜக உத்தேசித்துள்ளது.
பிகார்: பிகாரில் பாஜகவுக்கு சவால் அதிகமாக உள்ளது. அங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 31 இடங்களிலும், கடந்த 2019-இல் 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. எனினும் பிகாரில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி ஆகியவற்றின் கூட்டு பலம் பாஜகவுக்கு சவால் அளிப்பதாக இருக்கும்.
பிகார் மாநில பாஜக தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில் 35 இடங்களைக் கைப்பற்றுவது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com