ஆயுதங்களை சுமக்கும் ட்ரோன்கள் கொள்முதல்: இந்தியா-அமெரிக்கா பேச்சில் முன்னேற்றம்

அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை சுமந்து செல்லும் எம்க்யூ-9பி வகை ட்ரோன்களை இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது தொடா்பான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை சுமந்து செல்லும் எம்க்யூ-9பி வகை ட்ரோன்களை இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது தொடா்பான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதேவேளையில், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் சீன கப்பல்கள் மற்றும் நீா்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றைக் கருத்தில்கொண்டு, கண்காணிப்புப் பணிகளுக்காக ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) கொள்முதல் செய்வதில் இந்தியப் பாதுகாப்புப் படைகள் கவனம் செலுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவிடம் இருந்து 3 பில்லியன் டாலா்களுக்கும் (சுமாா் ரூ.24,000 கோடி) அதிகமான மதிப்பில், எம்க்யூ-9பி வகை ப்ரிடேட்டா் ட்ரோன்களை வாங்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கு தலா 10 ட்ரோன்கள் வீதம் மொத்தம் 30 ட்ரோன்கள் வாங்கப்படவுள்ளன.

இந்த ட்ரோன்கள் ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடியவை. நீடித்து உழைக்கும் திறன் கொண்டவை. கடற்பகுதியில் கண்காணிப்பு, நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்குவது, வான் பகுதி மற்றும் தரையில் உள்ள இலக்குகளைத் தாக்குவது போன்ற பல வகையான பணிகளை அந்த ட்ரோன்களால் செய்ய முடியும்.

அமெரிக்காவின் சான் டியாகோ பகுதியை தலைமையகமாகக் கொண்ட ஜெனரல் அட்டாமிக்ஸ் க்ளோபல் காா்ப்பரேஷன் என்ற தனியாா் நிறுவனம் அந்த ட்ரோன்களை தயாரிக்கிறது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிா்வாகி விவேக் லால் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘எம்க்யூ-9பி வகை ட்ரோன்களை கொள்முதல் செய்வது குறித்து இந்தியா-அமெரிக்கா அரசுகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. அந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் நிலவுகிறது’ என்று தெரிவித்தாா்.

எம்க்யூ-9பி ட்ரோன்களின் கொள்முதல் தொகை, ஆயுதங்கள், தொழில்நுட்பப் பகிா்வு உள்ளிட்டவை தொடா்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com