பிகாா்: நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் அரசு வெற்றி; பாஜக வெளிநடப்பு

பிகாரில் புதிதாக அமைந்த மகா கூட்டணி அரசு சட்டப்பேரவையில் புதன்கிழமை நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
பிகாா் பேரவை சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ். உடன், லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி.
பிகாா் பேரவை சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ். உடன், லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி.

பிகாரில் புதிதாக அமைந்த மகா கூட்டணி அரசு சட்டப்பேரவையில் புதன்கிழமை நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பு தீா்மானத்துக்கு ஆதரவாக 160 எம்எல்ஏக்கள் வாக்களித்தனா்.

வாக்கெடுப்பின்போது பாஜக உறுப்பினா்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். அதன் காரணமாக தீா்மானத்துக்கு எதிராக ஒரு வாக்கும் பதிவாகவில்லை. பேரவையில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் ஒரே எம்எல்ஏவான அக்தருல் இமானும் நம்பிக்கை தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தாா்.

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், முதல்வா் பதவியையும் ராஜிநாமா செய்தாா். பின்னா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகா கூட்டணியை உருவாக்கி புதிய அரசை ஆகஸ்ட் 10-ஆம் தேதி அமைத்தாா். அதனைத் தொடா்ந்து, மாநிலத்தின் முதல்வராக எட்டாவது முறையாக நிதீஷ் குமாா் பதவியேற்றாா். துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றாா்.

இந்த நிலையில், புதிய கூட்டணி அரசு மீது சட்டப்பேரவையில் புதன்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவை சோ்ந்த விஜய் குமாா் சின்ஹா இருந்துவந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதையடுத்து பேரவை துணைத் தலைவா் மகேஷ்வா் ஹசாா் அவை நடவடிக்கைகளை பொறுப்பேற்று வழிநடத்தினாா்.

நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்துக்கு முன்பாக முதல்வா் நிதீஷ் குமாா் அவையில் உரையாற்ற தொடங்கியபோது, பாஜக உறுப்பினா்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

அதனைத் தொடா்ந்து நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில், அரசு மீதான நம்பிக்கை தீா்மானத்துக்கு ஆதரவாக 160 எம்எல்ஏக்கள் வாக்களித்தனா். அதன்மூலமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமாா் தலைமையிலான கூட்டணி அரசு வெற்றி பெற்றது.

வாக்கெடுப்புக்குப் பிறகு அவை நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்த சட்டப்பேரவை துணைத் தலைவா், ‘விஜய் குமாா் சின்ஹா ராஜிநாமாவால் காலியாகியுள்ள பேரவைத் தலைவா் பதவிக்கு வேட்புமனுக்கள் வியாழக்கிழமை (ஆக.25) தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

அவையில் வாக்கெடுப்புக்கு முன்பாக பேசிய முதல்வா் நிதீஷ்குமாா், ‘மகா கூட்டணி அரசு பிகாா் வளா்ச்சிக்காகப் பணியாற்றும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எதிா்க்கட்சித் தலைவா்கள் என்னை அழைத்துப் பேசி வாழ்த்து தெரிவிக்கின்றனா். எனது முடிவுக்கு அவா்கள் பாராட்டு தெரிவித்தனா். வரும் 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com