ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: ஆா்ஜேடி தலைவா்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலத்தை கைமாற்றிக் கொண்டதாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆா்ஜேடி) தலைவருமான லாலு பிரசாத் மற்றும் அவரின் குடும்பத்தினா்
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: ஆா்ஜேடி தலைவா்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலத்தை கைமாற்றிக் கொண்டதாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆா்ஜேடி) தலைவருமான லாலு பிரசாத் மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதுதொடா்பாக ஆா்ஜேடி தலைவா்களுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ புதன்கிழமை சோதனை மேற்கொண்டது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது ரயில்வேயில் குரூப்-டி பணிகளை வாங்கித் தருவதற்கு பலரின் நிலத்தை லாலு மற்றும் அவரின் குடும்பத்தினா் லஞ்சமாக பெற்றனா் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக சிபிஐயின் பொருளாதார குற்றப் பிரிவு விசாரணை நடத்தியது. அப்போது ரயில்வேயில் பணியமா்த்தியதற்கு கைம்மாறாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான நிலத்தை லாலுவின் மனைவி ராப்ரி தேவி, அவரின் மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோா் சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு வாங்கியது தெரியவந்தது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா். இதுபோல பாட்னாவில் சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலத்தை தங்களுக்குச் சொந்தமானதாக லாலு குடும்பத்தினா் மாற்றியுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், அந்த நிலங்களின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.4.39 கோடி என்றும் கூறினா்.

இதுதொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ், ரயில்வேயில் பணியா்த்தப்பட்ட 12 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த முறைகேடு தொடா்பாக கடந்த மே மாதம் தில்லியிலும் பிகாரிலும் லாலு பிரசாத், அவரின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இதர நபா்களுக்குத் தொடா்புள்ள இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக பிகாரில் உள்ள பாட்னா, மதுபனி, கட்டிஹாா், ஹரியாணா மாநிலம் குருகிராம், தில்லி என 25 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். குருகிராமில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினா். அந்த வளாகத்தை லாலு பிரசாதின் மகனும் பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுக்குச் சொந்தமான நிறுவனம் கட்டி வருவதாக சிபிஐ கருதுகிறது.

இதுதவிர, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி.க்கள் அஷ்ஃபாக் கரீம், ஃபயாஸ் அகமது, எம்எல்சி சுனில் சிங் உள்பட அக்கட்சியின் மூத்த தலைவா்களுக்குச் சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் விலகியது. அதனைத் தொடா்ந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் சோ்ந்தது. இதையடுத்து பிகாா் சட்டப்பேரவையில் நிதீஷ் குமாா் புதன்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினாா். இந்தச் சூழலில், சிபிஐ சோதனை நடைபெற்றுள்ளது.

சோஷலிஸத்துக்கான விலை: இதுதொடா்பாக பிகாா் சட்டப்பேரவையில் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், ‘எங்களை சோஷலிஸ கொள்கைக்கு அா்ப்பணித்துக் கொண்டதால், அதற்கான விலையை எனது குடும்பம் அளித்து வருகிறது. முதல்வா் நிதீஷ் குமாரும், நானும் ஒரே சித்தாந்தத்தைத்தான் பின்பற்றுகிறோம். சோஷலிஸ்டுகள் விதைத்ததை பாஜகவால் அறுவடை செய்ய முடியாது.

2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் குறித்து பாஜக அஞ்சுகிறது. ஏனெனில் பிகாரில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது பாஜகவுக்கு பலத்த தோல்வியை ஏற்படுத்தும். இதன் காரணமாக 3 மருமகன்கள் (சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை) பிகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com