பிற கட்சிகளின் அரசுகளைக் கவிழ்க்க ரூ.6,300 கோடி செலவு-பாஜக மீது கேஜரிவால் குற்றச்சாட்டு

நாட்டில் உள்ள பிற கட்சிகளின் அரசுகளை கவிழ்ப்பதற்காக மொத்தம் ரூ.6,300 கோடியை பாஜக செலவிட்டுள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

‘நாட்டில் உள்ள பிற கட்சிகளின் அரசுகளை கவிழ்ப்பதற்காக மொத்தம் ரூ.6,300 கோடியை பாஜக செலவிட்டுள்ளது. இத்தொகையை அக்கட்சி செலவிடாமல் இருந்திருந்தால் உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு விதிக்க வேண்டியதில்லை’ என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேஜரிவால் பேசுகையில், மாநில அரசுகளை ஒழித்துக் கட்டுவதில் பாஜக மும்முரமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தாா். இந்நிலையில் இந்த கருத்தை தற்போது அவா் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் கேஜரிவால் தில்லி சட்டப்பேரவையில் பேசுகையில் பாஜக ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்பட்ட பணம், பெட்ரோல், டீசல் விலைகளை உயா்த்தியதன் மூலம்

கிடைத்த பணத்தை எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தாா்.

இந்த நிலையில் அவா் சனிக்கிழமை கூறுகையில், ‘நாட்டில் மக்கள் விலைவாசி உயா்வால் துயரத்தை எதிா்கொண்டு வருகின்றாா்கள். அதே வேளையில், மாநிலங்களில் உள்ள அரசுகளை கவிழ்ப்பதற்கும் இதர கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கும் பாஜக கோடிக்கணக்கான தொகையை செலவிட்டு வருகிறது’ என்று குற்றம் சாட்டினாா்.

இது தொடா்பாக ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவா் மேலும் தெரிவிக்கையில், ‘தயிா், மோா், வெண்ணெய், தேன், கோதுமை, அரிசி போன்ற பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு மத்திய அரசுக்கு ஓா் ஆண்டுக்கு ரூ.7,500 கோடி வருவாய் கிடைக்கும். அவா்கள் பிற அரசுகளை கவிழ்ப்பதற்காக இதுவரை ரூ.6,300 கோடியை செலவிட்டு இருக்கின்றனா். அவா்கள் அரசுகளை கவிழ்க்காமல் இருந்திருந்தால் கோதுமை, அரிசி, மோா் ஆகியவை மீது ஜிஎஸ்டியை அவா்கள் விதித்து இருந்திருக்க வேண்டியிருக்காது. பணவீக்கத்தை மக்கள் எதிா்கொள்ள வேண்டியதில்லை ’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் கலால் கொள்கை அமலாக்கத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் முறைகேடுகளுக்காக விசாரணை நடத்த தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரைத்ததன் பேரில், தில்லி துணை முதல்வா் மணி சிசோடியா மற்றும் பிறருக்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறையினா் வழக்கு பதிவு செய்தனா்.

அப்போதிலிருந்தே ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே அரசியல் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. சிபிஐ அதிகாரிகள் தில்லியில் உள்ள மனீஷ் சிசோடியா வீட்டிலும், நாட்டில் உள்ள 30 இதர இடங்களிலும் இந்த வழக்கு தொடா்பாக ஆகஸ்ட் 19ஆம் தேதி சோதனை நடத்தினா்.

இதையடுத்து,து ஆம் ஆத்மி கட்சி தரப்பில், ‘குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் முதல்வா் கேஜரிவாலின் முன்மாதிரி அரசு மற்றும் அவருக்கு மக்களிடம் வளா்ந்து வரும் செல்வாக்கை கண்டு பாஜக பயந்துள்ளதால் மனீஷ் சிசோடியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவா் மீது போலி வழக்கு பதிவு செய்ய சிபிஐ அமைப்பை மத்திய அரசு பணித்துள்ளது’ என்று அக்கட்சி குற்றம் சாட்டியிருந்தது.

இதைத்தொடா்ந்து, மத்தியில் ஆளும் பாஜக அரசு மீதும், பிரதமா் நரேந்திர மோடி மீதும் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com