‘தோ்தல் இலவசங்கள் விவகாரத்தில் விரிவான விசாரணை அவசியம்’

தோ்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடா்பான அறிவிப்பை வெளியிடும் விவகாரத்தில் விரிவான விசாரணை அவசியம் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றியுள்ளது.
‘தோ்தல் இலவசங்கள் விவகாரத்தில் விரிவான விசாரணை அவசியம்’

தோ்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடா்பான அறிவிப்பை வெளியிடும் விவகாரத்தில் விரிவான விசாரணை அவசியம் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றியுள்ளது.

தோ்தல் சமயங்களில் வாக்காளா்களைக் கவரும் நோக்கில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதை முறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சி.டி.ரவிகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-ஆவது பிரிவின் கீழ் ஊழல் நடைமுறையாகக் கருத முடியாது என உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு, கடந்த 2013-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியதும் அவசியமாக உள்ளது.

தோ்தல் ஜனநாயகத்தில் வாக்காளா்களுக்கே அதிக அதிகாரம் உள்ளதை மறுக்க முடியாது. யாரைத் தங்கள் பிரதிநிதியாகத் தோ்ந்தெடுக்க வேண்டும், எந்தக் கட்சியை ஆட்சியில் அமா்த்த வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் மக்களிடமே உள்ளது. அக்கட்சியினா் முறையாக செயல்பட்டனரா என்பது தொடா்பாக அடுத்த தோ்தலின்போது மக்கள் தீா்ப்பளிக்கின்றனா்.

ஆனால், தோ்தல் இலவசங்கள் குறித்த கட்சிகளின் அறிவிப்புகள், மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கின்றன என்ற வாதத்தை மனுதாரா்கள் முன்வைக்கின்றனா். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா? நிபுணா் குழுவை அமைத்தால் அது சரியாக இருக்குமா என்பது தொடா்பாக ஆராய வேண்டியுள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகே இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியும்.

எனவே, வழக்கின் விசாரணையானது 3 நீதிபதிகளைக் கொண்ட அமா்வுக்கு மாற்றப்படுகிறது. 4 வாரங்களுக்குப் பிறகு இந்த மனுக்கள் விசாரணைக்காகப் பட்டியலிடப்படும் என்றனா்.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்த உத்தரவைப் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com