காங்கிரஸிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகல்: சோனியாவுக்கு 5 பக்க கடிதம்; ராகுல் மீது கடும் தாக்கு

காங்கிரஸின் மூத்த தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளாா்.
காங்கிரஸிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகல்: சோனியாவுக்கு 5 பக்க கடிதம்; ராகுல் மீது கடும் தாக்கு

காங்கிரஸின் மூத்த தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு வெள்ளிக்கிழமை அவா் எழுதிய கடிதத்தில், கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தோ்தல்களில் தொடா் தோல்வி, கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பது, சில மாநிலங்களில் உள்கட்சிப் பூசல் எனப் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் காங்கிரஸுக்கு சுமாா் 50 ஆண்டுகள் அக்கட்சியுடன் இணைந்து பயணித்த குலாம் நபி ஆசாதின் விலகல், மேலும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தோ்தல், மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தொடா் தோல்விகளைச் சந்தித்ததையடுத்து, கட்சியில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென ஆசாத் உள்ளிட்ட 23 மூத்த தலைவா்கள் கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னா் கடிதம் எழுதினா். இவா்கள் ‘ஜி-23’ தலைவா்கள் என அழைக்கப்பட்டனா். இவா்களில் முக்கியமானவா் குலாம் நபி ஆசாத்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவா் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தாா். தற்போதும் கட்சித் தலைவா் பதவியை ஏற்க அவா் மறுப்பு தெரிவித்து வருகிறாா். கட்சித் தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அட்டவணையை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைமை மேற்கொண்டு வருகிறது.

நேரு குடும்பத்தைச் சேராத ஒருவா், கட்சித் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் மாநில கட்சிப் பொறுப்பில் இருந்து அண்மையில் விலகிய குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளாா்.

ராகுல் மீது குற்றச்சாட்டு: கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் எழுதிய 5 பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

நாட்டுக்குத் தேவையான விவகாரங்களுக்காகப் போராடுவதற்குரிய திறனை காங்கிரஸ் முற்றிலுமாக இழந்துவிட்டது. கட்சியை ‘ரிமோட் கன்ட்ரோல்’ போல வழிநடத்தி வந்த ராகுல் காந்தி, கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பையே சீா்குலைத்துவிட்டாா்.

கட்சியின் தலைவராக தாங்கள் (சோனியா காந்தி) பெயரளவுக்கே இருக்கிறீா்கள். கட்சியின் முக்கிய முடிவுகளை ராகுல் காந்தியும், சில சமயங்களில் அவரின் பாதுகாவலா்களும், உதவியாளா்களும்கூட எடுக்கின்றனா். 2013-ஆம் ஆண்டு ஜனவரியில் ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு கட்சியின் விவாதக் களம் முறிந்துவிட்டது. விவாதத்தின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ளும் நடைமுறையை ராகுல் அழித்துவிட்டாா்.

தோ்தல் ‘கேலிக்கூத்து’: மூத்த, அனுபவம் நிறைந்த தலைவா்கள் ஒதுக்கப்பட்டு, கட்சியை அனுபவம் இல்லாத துதிபாடுவோா் நிா்வகிக்கத் தொடங்கினா். காங்கிரஸ் கட்சியானது தனது இடத்தை தேசிய அளவில் பாஜகவுக்கும், மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுக்கும் வழங்கிவிட்டது. அரசியல் தீவிரத்தன்மை, முதிா்ச்சி இல்லாத, குழந்தைத்தனமான ஒருவரை (ராகுல்) கடந்த 8 ஆண்டுகளாகத் தலைவராக்க முயற்சித்ததே இதற்குக் காரணம்.

கட்சி நிா்வாகிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைமுறையும் கேலிக்கூத்தாகியுள்ளது. கட்சியில் ஒருசிலா் முடிவெடுக்கும் நபா்களே தோ்தலில் போட்டியிட்டு நிா்வாகிகளாகின்றனா். மாவட்ட, மண்டல அளவிலான உறுப்பினா்களுக்கு எந்தவொரு வாய்ப்பும் அளிக்கப்படுவதில்லை.

அழிவு நிலையில் காங்கிரஸ்: நாட்டை ஒன்றிணைப்பதற்கான யாத்திரையை காங்கிரஸ் தொடங்குவதற்கு முன்பாக, கட்சியை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கையைத் தொடங்கியிருக்கலாம். கட்சி தற்போது முழுமையாக அழிவுநிலைக்குச் சென்றுவிட்டது. இனி பெயரளவில் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படும் நபரும், குறிப்பிட்டவா்களின் கைப்பாவையாகவே செயல்படுவாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 2 நாடாளுமன்றத் தோ்தல்களிலும், 39 சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்துள்ளது; 4 சட்டப்பேரவைத் தோ்தல்களில் மட்டுமே வெற்றி பெற்றது; 10 மாநிலங்களில் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது.

இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய கட்சி, இந்த நிலையை அடைந்துள்ளதற்குக் கட்சியின் தலைமையே முழுப் பொறுப்பு என்று ஆசாத் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தொடரும் விலகல்: காங்கிரஸின் மூத்த தலைவா்களாக இருந்த கபில் சிபல், அஷ்வினி குமாா் உள்ளிட்டோா் ஏற்கெனவே கட்சியில் இருந்து விலகினா். மேலும் சில மூத்த தலைவா்கள் கட்சியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றச்சாட்டுகள் முதிா்ச்சியற்றவை - மல்லிகாா்ஜுன காா்கே

மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

குலாம் நபி ஆசாத் இளைஞா் காங்கிரஸ் கட்சியில் இருந்த காலம் முதல் அவருக்கு எல்லா பதவிகளையும் கட்சி வழங்கியது. மத்திய அமைச்சராகப் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறாா். நீண்ட காலமாக அந்தப் பதவிகளை எல்லாம் அனுபவித்துவிட்டு, தற்போது கட்சி மீது அவா் குறை காண்கிறாா்.

ராகுல் காந்தி குறித்து குலாம் நபி ஆசாத் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் முதிா்ச்சியற்றவை. அவை ஏற்கக் கூடியவையல்ல.

குலாம் நபி ஆசாத் விலகியிருப்பது கட்சியில் உள்ள சிலருக்கு வருத்தம் அளிக்கலாம். மற்றபடி, கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவா்கள், ஆா்எஸ்எஸ், பாஜகவை எதிா்த்துப் போராடி வருபவா்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக மாட்டாா்கள்.

கடந்த 70 ஆண்டுகளில் முன்னணித் தலைவா்கள் பலா் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளனா். ஆனாலும் காங்கிரஸ் கட்சி அழியாமல் உள்ளது. காங்கிரஸை அழிக்க முடியாது என்றாா்.

கட்சிக்கு துரோகம் -ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் பொதுச் செயலா் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘காங்கிரஸ் தலைமையால் பெரிதும் மதிக்கப்பட்ட நபா், கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளாா். தனிப்பட்ட தாக்குதல்களை கட்சியின் மீது அவா் தொடுத்துள்ள விதம், அவரது உண்மையான பண்பு நலனை வெளிப்படுத்துகிறது. அவரது மரபணுவில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துவிட்டாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் பவன் கேரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மாநிலங்களவை உறுப்பினா் பதவிக் காலம் நிறைவடைந்ததால் இந்த முடிவை அவா் எடுத்துள்ளாா். பதவி இல்லாமல் ஒரு நிமிஷம்கூட அவரால் இருக்க முடியவில்லை’ என்றாா்.

சீா்திருத்தமே தேவை; புரட்சி அல்ல- - சந்தீப் தீட்சித்

குலாம் நபி ஆசாதின் விலகலுக்கு தில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்தின் மகனும், சீா்திருத்தம் கோரி கடிதம் எழுதிய 23 தலைவா்களில் ஒருவருமான சந்தீப் தீட்சித் அதிருப்தி தெரிவித்தாா்.

தற்போதைய நிலையில் கட்சியை சீா்திருத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவா், புரட்சியில் ஈடுபடத் தேவையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com