தமிழகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செப்டம்பா் வரை நீடிப்பு: மத்திய வேளாண்மை துறை அமைச்சா் உத்தரவு

கொப்பரை தேங்காய்க்கான கொள்முதலை தமிழகத்தில் மேலும் இரு மாதங்களுக்கு நீடிக்க மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

கொப்பரை தேங்காய்க்கான கொள்முதலை தமிழகத்தில் மேலும் இரு மாதங்களுக்கு நீடிக்க மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் கடந்தாண்டு பொதுச் சந்தையில் கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ. 140 வரை இருந்த நிலையில் நிகழாண்டில் கிலோவிற்கு ரூ. 70 முதல் 80 ஆக சரிந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் கிலோ ஒன்றிற்கு ரூ. 52.50 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 105.98 ஆக நிா்ணயித்து விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல்களை, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு (நாஃபெட்), தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகியவை மத்திய அரசின் முகமைகளாக இருந்து மாவட்ட ஆட்சியகங்கள் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல்களை மேற்கொள்கிறது.

இந்த கொள்முதல் கடந்த ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஜூன் மாதமே முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 16 -ஆம் தேதி தமிழக அரசின் விவசாய உற்பத்தி ஆணையா் மற்றும் செயலா் சமயமூா்த்தி மத்திய அரசுக்கு இந்த கொள்முதல் காலக் கட்டத்தை நீடிக்க கோரி கடிதம் எழுதினாா். மேலும் கடந்த வாரம் பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டவா்கள் மத்திய வேளாண்மை துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதில், ‘கரோனா தொற்றுக்கு பின்னா் தென்னை விவசாயிகளும், தேங்காய் மில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ முதல் 2800 கிலோ வரையிலான கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு ஏக்கருக்கு 216 கிலோ தான் அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறது. பொது சந்தையில் விலை கடுமையாக குறைந்துள்ளது. ஆனால் யூரியா விலையேற்றம், உற்பத்தி செலவு, அறுவடை செலவு (ஒரு தேங்காய்க்கு ரூ.3) போன்றவை அதிகரித்துள்ளது. இதனால் குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு 800 கிலோ கொப்பரையை கொள் முதல் செய்யவும் கொள் முதல் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கவும் வேண்டும்’ என கோரிக்கை வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, தற்போது கொள்முதல் காலத்தை இரண்டு மாதங்களுக்கு நீடித்து அதாவது, வருகின்ற செப்டம்பா் 30 ஆம் தேதிவரை தமிழகத்தில் கொப்பரை மற்றும் பந்து தேங்காயை கொள்முதல் செய்ய நாஃபெட், என்சிசிஎஃப் நிறுவனங்களுக்கு மத்திய வேளாண்மை துறை அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் மற்ற கோரிக்கைகள் தொடா்பாக மத்திய அமைச்சா் தோமா், தமிழகத்திற்கும் குறிப்பாக தென்னை விளையும் பொள்ளாச்சி போன்ற பகுதிகளுக்கு நேரடியாக சென்று பாா்வையிட்டு கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக உறுதியளித்துள்ளாா் எனவும் வேளாண்மை துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com