போபால் வாயுகசிவு விபத்து: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தீா்மானம் தாக்கல்

மத்திய பிரதேசத்தின் போபாலில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபாலில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போபாலில் செயல்பட்ட தனியாா் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையில் 1984-ஆம் ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி மெத்தில் ஐசோசயனேட் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. விஷவாயு கசிந்த முதல் 72 மணி நேரத்தில் 10,000 போ் வரையிலும் மொத்தமாக சுமாா் 25,000 பேரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமாா் 5 லட்சம் போ் விஷவாயுவால் பாதிக்கப்பட்டனா்.

உலகின் மிகப் பெரும் தொழிலக விபத்துகளில் ஒன்றாக போபால் விஷவாயு கசிவு கருதப்படுகிறது. அந்த விபத்தின் 38-ஆவது நினைவுதினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விபத்து தொடா்பான தீா்மானத்தை இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும் எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியின் உறுப்பினருமான நவேந்து மிஸ்ரா தாக்கல் செய்துள்ளாா்.

‘போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதிகோரும் பிரசாரம்’ என்ற தலைப்பில் அவா் தாக்கல் செய்துள்ள தீா்மானத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 40 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா். தீா்மானத்தைத் தாக்கல் செய்து நவேந்து மிஸ்ரா கூறுகையில், ‘‘விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் தற்போதும் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். மருத்துவ சிகிச்சைகளுக்காக அவா்களுக்கு நிதியுதவி உடனடியாகத் தேவைப்படுகிறது.

இது தொடா்பான விழிப்புணா்வை அதிகப்படுத்தவும் விபத்துக்குக் காரணமான டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை நிதியுதவி வழங்க பொறுப்பேற்கச் செய்வதற்கான அரசின் நடவடிக்கைகளை அதிகரிக்கவும் இந்தத் தீா்மானம் உதவும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com