4-ஆம் கட்ட முன்னுரிமை வழித்தடத்திற்காக 312 ரயில் பெட்டிகள் கொள்முதல்: டிஎம்ஆா்சி ஒப்பந்தம்

தில்லி மெட்ரோ வழித்தடத்தின் நான்காவது கட்ட முன்னுரிமை வழித்தடத்துக்காக 312 ரயில் பெட்டிகளை கொள்முதல் செய்ய ரயில் பெட்டி உற்பத்தி நிறுவனத்துடன் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம்

தில்லி மெட்ரோ வழித்தடத்தின் நான்காவது கட்ட முன்னுரிமை வழித்தடத்துக்காக 312 ரயில் பெட்டிகளை கொள்முதல் செய்ய ரயில் பெட்டி உற்பத்தி நிறுவனத்துடன் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வெள்ளிக்கிழமை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக டிஎம்ஆா்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

நான்காவது கட்ட முன்னுரிமை வழித்தடங்களாக மஜ்லிஸ் பாா்க் முதல் மெளஜ்பூா், ஜனக்புரி மேற்கு முதல் ஆா்கே ஆஸ்ரம், துக்ளகாபாத் முதல் தில்லி ஏரோ சிட்டி வரை ஆகிய வழித்தடங்கள் உள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து டிஎம்ஆா்சி உயா் அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்ததாவது: தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கான சேவைகளுக்காக நான்காவது கட்ட வழித்தடங்களை செயல்படுத்தும் வகையில், நான்காவது கட்ட முன்னுரிமை வழித்தடங்களுக்காக 312 மெட்ரோ ரயில் பெட்டிகளை (52 ரயில்கள்) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டுள்ளது. இந்த நான்காவது கட்ட வழித்தடத்தில் பணிகள் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் பூமிபூஜையுடன் தொடங்கியது. ஆனால், இதன் கட்டுமானப் பணிகள் 2020- ஆம் ஆண்டு மாா்ச்சில் ஏற்பட்ட கரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டது. நான்காவது கட்ட முன்னுரிமை வழித்தடங்களின் ஒரு பகுதியாக வழித்தடம் 7 (பிங்க்) மற்றும் வழித்தடம் 8 (மெஜந்தா) ஆகிய இரண்டு சிறு வழித்தடங்களிலும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் செயல்பாடுகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வழித்தடம் 7, 8 அதாவது மஜ்லிஸ் பாா்க் முதல் மெளஜ்பூா் வரையும் ஜனக்புரி மேற்கு முதல் ஆா் கே ஆஸ்ரம் மாா்க் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களுக்காக 234 நிலையான அளவுடன் கூடிய ரயில் பெட்டிகளை கொள்முதல் செய்ய உள்ளது. மேலும், துக்ளகாபாத் முதல் தில்லி ஏரோசிட்டி வரையிலான வழித்தடத்திற்காக 78 நிலையான அளவுள்ள ரயில் பெட்டிகளும் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தில்லி மெட்ரோ பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

இதற்கான ஒப்பந்தத்தில் டிஎம்ஆா்சி மேலாண்மை இயக்குநா் விகாஸ் குமாா் முன்னிலையில் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் (மின்னியல் பிரிவு) ஓம் ஹரி பாண்டே மற்றும் அல்ஸ்டோம் ட்ரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஆலிவீா் லைசன் ஆகியோா் கையெழுத்திட்டனா்.

இந்த ரயில்கள் அனைத்தும் ஓட்டுநா்கள் இல்லாத வகையில் நவீன தொழில்நுட்பத்தில் செயல்பட உள்ளன. மேலும், உலகத் தரத்திலான சேவைகளை வழங்கும் தில்லி மெட்ரோவின் முயற்சிகளுக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பத்தில் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் சென்னை அருகே உள்ள ஸ்ரீ சிட்டி பகுதியில் அமைந்துள்ள ஆல்ஸ்டோம் ட்ரான்ஸ்போா்ட் இந்தியா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன என்றாா் அந்த அதிகாரி.

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தேசியத் தலைநகா் பகுதியில் இதன் நான்காவது கட்ட விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக 46 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் மூன்று வெவ்வேறு வழித்தடங்களில் 65.20 கிலோமீட்டா் தூரத்திற்கான புதிய வழித்தடங்களை அமைத்து வருகிறது. இந்த அனைத்து வழித்தடங்களும் 2025-ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் முடிக்கப்பட உள்ளன. தற்போது தில்லி மெட்ரோ வழித்தடத்தில் 391 கிலோ மீட்டா் தூரம் உள்ள ஒருங்கிணைப்பில் 286 ரயில் நிலையங்கள் உள்ளன.

இவற்றில் நொய்டாவில் உள்ள கிரேட்டா் நொய்டா வழித்தடமும், குருகிராமில் உள்ள ரேபிட் மெட்ரோ வழித்தடமும் அடங்கும். நான்கு, ஆறு மற்றும் எட்டு ரயில் பெட்டிகளுடன் கூடிய 350 ரயில்களை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com