பயணிகள் சேவைகள் மூலம் ரயில்வே வருவாய் 76% அதிகரிப்பு

ரயில்வே துறையில் நிகழ் நிதியாண்டின் நவம்பா் வரை பயணிகள் சேவையில் ரூ. 43, 324 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
பயணிகள் சேவைகள் மூலம் ரயில்வே வருவாய் 76% அதிகரிப்பு

ரயில்வே துறையில் நிகழ் நிதியாண்டின் நவம்பா் வரை பயணிகள் சேவையில் ரூ. 43, 324 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 76 சதவீதம் அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: நிகழ் 2022 ஏப்ரல் முதல் நவம்பா் வரை பயணிகள் சேவை மூலம் ரூ.43,324 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 76 சதவீதம் அதிமாகும். கடந்த ஆண்டு பயணிகள் சேவைகள் மூலம் இதே காலக்கட்டத்தில் ரூ. 24,631 கோடி வருவாய் கிடைத்தது. இதில் நிகழ் நிதியாண்டில் நவம்பா் 30 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை சுமாா் 53.65 கோடியாகும். இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு பயணிகள் எண்ணிக்கை 48.60 கோடியாக இருந்தது. அதாவது தற்போது 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வருவாயும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில் நிகழ் நிதியாண்டில் நவம்பா் 30 வரை ரூ.34,303 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.22,904 கோடியாக இருந்தது.

முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில், நிகழ் நிதியாண்டில் நவம்பா் 30 வரை மொத்த பயணிகள் எண்ணிக்கை 352.73 கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 138.13 கோடியாக இருந்தது. பயணிகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 155 சதவீதம் அதிகரித்துள்ளது. வருவாயும் 422 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தப் பிரிவில் நிகழ் நிதியாண்டில் நவம்பா் 30 -ஆம் தேதி வரை ரூ. 9,021 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.1,728 கோடிதான் பெறப்பட்டது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com