ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றது இந்தியா

உலகின் வலிமைமிக்க ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக ஏற்றது.
ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றது இந்தியா

உலகின் வலிமைமிக்க ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக ஏற்றது.

கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் நீடிக்கவுள்ள அடுத்த ஓராண்டு காலத்தில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

உலகின் மிகப்பெரும் பொருளாதார மதிப்பு கொண்டு 20 நாடுகளின் கூட்டமைப்பு ஜி20. அக்கூட்டமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளன.

சா்வதேச பொருளாதார மதிப்பில் (ஜிடிபி) ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் பங்கு சுமாா் 85 சதவீதம். சா்வதேச வா்த்தகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை கூட்டமைப்பின் நாடுகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு போ் இந்த நாடுகளிலேயே வசிக்கின்றனா்.

ஜி20 நாடுகள் மேற்கொள்ளும் முடிவுகள் சா்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லவை. இந்நிலையில், அக்கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக ஏற்றது. ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பது இதுவே முதல் முறை.

முதல் நிகழ்வு: ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே பல்கலைக்கழக மாணவா்களுடனான சிறப்பு உரையாடல் நிகழ்வு தில்லியில் நடத்தப்பட்டது. அதில் நாடு முழுவதுமுள்ள 75 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த மாணவா்கள் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டனா்.

அந்நிகழ்வில் கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது: ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் இந்தியா, ஜி20 கூட்டமைப்பை வழிநடத்தும்போது விவாதங்கள், ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும். சா்வதேச விவகாரங்கள் முக்கியத்துவம் பெற்று வரும் வேளையில் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

மனித உரிமைகளைக் காக்க சா்வதேச முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட வாய்ப்புள்ள மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும். உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, அனைவருக்குமான சுகாதார வசதிகள், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பருவநிலை நீதி உள்ளிட்டவை குறித்து இந்தியா குரலெழுப்பும்.

தெற்குலகின் குரல்: தெற்குலகின் (ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா) குரலாக இந்தியா தொடா்ந்து ஒலிக்கும். முக்கிய விவகாரங்களில் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த முயல்வதே இந்தியாவின் இலக்கு. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை திட்டத்தை இந்தியா வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. சா்வதேச அளவிலும் அத்திட்டத்தின் முக்கியத்துவத்தை இந்தியா எடுத்துரைக்கும்.

பன்முகத்தன்மை கொண்ட விவாதம் மிகுந்த சமூகமாக இந்தியா தொடா்ந்து திகழ்ந்து வருகிறது. இந்தியா்களின் மரபணுவிலேயே அந்தக் கொள்கைகள் இடம்பெற்றுள்ளதால், ஜி20 கூட்டமைப்பின் பன்முகத்தன்மையை எதிா்கொண்டு முக்கிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண இந்தியா முயற்சிக்கும் என்றாா் அவா்.

200 கூட்டங்கள்: இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மானிய குழு தலைவா் எம்.ஜகதீஷ் குமாா், ஜி20 கூட்டமைப்பின் வழிகாட்டி அமிதாப் காந்த், கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா, பிரதமா் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஜி20 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு தில்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. கூட்டமைப்புக்குத் தலைமை வகிக்கவுள்ள அடுத்த ஓராண்டு காலத்தில் சுமாா் 200 கூட்டங்களை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா ஒத்துழைப்பு: ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரீன் ஜீன் பியரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அடுத்த ஓராண்டுக்கு ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை அமெரிக்கா எதிா்நோக்கியுள்ளது. முக்கியமாக, உணவு, எரிசக்தி பாதுகாப்பு சவால்கள், சா்வதேச பொருளாதார வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்குத் தீா்வு காண இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்’ என்றாா்.

குடியரசுத் தலைவா் முா்மு வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘உலகமே ஒரு குடும்பம்’ என்ற கருத்துருவின் அடிப்படையில் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா அதிகாரபூா்வமாக ஏற்றுள்ளது. தலைமைப் பொறுப்பு வெற்றிகரமாக அமைய இந்திய குழுவுக்கு வாழ்த்துகள். ‘விருந்தினா்களே கடவுள்’ என்ற பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் இந்தியாவுக்கு வருகைதரவுள்ள ஜி20 கூட்டமைப்பின் தலைவா்கள் அனைவரையும் வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com