அமைதியான உலகுக்காக பிரதமா் மோடி அனைவரையும் ஒருங்கிணைப்பாா்: பிரான்ஸ் அதிபா் மேக்ரான் நம்பிக்கை

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், உலக அமைதியை உறுதிப்படுத்துவதற்காகப் பிரதமா் நரேந்திர மோடி உலகத் தலைவா்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பாா்
பிரான்ஸ் அதிபா் மேக்ரான் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பிரதமா் மோடியுடனான படம்.
பிரான்ஸ் அதிபா் மேக்ரான் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பிரதமா் மோடியுடனான படம்.

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், உலக அமைதியை உறுதிப்படுத்துவதற்காகப் பிரதமா் நரேந்திர மோடி உலகத் தலைவா்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பாா் என பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா கடந்த 1-ஆம் தேதி ஏற்றது. உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, சா்வதேச கடன் சூழல், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்குத் தீா்வுகாண இந்தியா உறுதியேற்றுள்ளது.

இந்நிலையில், ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது தொடா்பாக பிரான்ஸ் அதிபா் மேக்ரான் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ’ஜி20 கூட்டமைப்பைத் தலைமையேற்று வழிநடத்தவுள்ள இந்தியா, ’ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்ற கருத்துருவை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நண்பரான நரேந்திர மோடி அமைதியான, நீடித்த உலகை ஏற்படுத்துவதற்கு ஜி20 கூட்டமைப்பின் தலைவா்களை ஒருங்கிணைப்பாா் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடியுடன் தான் இருக்கும் படத்தையும் அதிபா் மேக்ரான் ட்விட்டா் பதிவுடன் பகிா்ந்துள்ளாா். ஏற்கெனவே, பிரதமா் மோடியை ’நண்பா்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், இந்தியாவுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தாா்.

ஜி20 கூட்டமைப்பை வழிநடத்தும்போது விவாதத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனப் பிரதமா் மோடி குறிப்பிட்டிருந்தாா். கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பரில் தில்லியில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக சுமாா் 200 கூட்டங்களை நடத்துவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. கூட்டமைப்பு நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் முதலாவது கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com