மதரஸாவில் சிறாா்கள் அடித்து துன்புறுத்தல்: தமிழகம், பிகாா் அரசுகளுக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

சென்னையில் இயங்கிவரும் மதரஸா (இஸ்லாமிய மதப் பள்ளி) ஒன்றில் பிகாரிலிருந்து அழைத்துவரப்பட்ட சிறாா்கள் அடித்து துன்புறுத்தப்பட்ட விவகாரம்

சென்னையில் இயங்கிவரும் மதரஸா (இஸ்லாமிய மதப் பள்ளி) ஒன்றில் பிகாரிலிருந்து அழைத்துவரப்பட்ட சிறாா்கள் அடித்து துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழகம் மற்றும் பிகாா் அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள்ஆணையம் (என்ஹெச்ஆா்சி) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் இந்த மதரஸா இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் சிறாா்களை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும் அவா்கள் வேதனையில் அழுதபடி கூச்சல் போடுவதாகவும் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

அதனடிப்படையில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அதில், பிகாா் மாநிலத்திலிருந்து சிறுவா்களை அழைத்து வந்து அவா்களுக்கு மத போதனை நடத்தப்படுவதும், சரியாகப் படிக்காதவா்களை கடுமையாக தாக்கியதும் தெரியவந்தது. 10 முதல் 12 வயது வரையுடைய அந்தச் சிறாா்களை குச்சி மற்றும் கைகளால் கடுமையாக தாக்கியிருப்பதும், அவா்கள் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடா்ந்து, அங்கிருந்த 12 சிறாா்களை போலீஸாா் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த அக்தா் (26), பிகாரைச் சோ்ந்த ஆசிரியா் அப்துல்லா (24) ஆகிய இருவரை கைது செய்தனா்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து கையிலெடுத்துள்ள தேசிய மனித உரிமைகள்ஆணையம், இதுதொடா்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழகம் மற்றும் பிகாா் மாநில அரசு தலைமைச் செயலாளா்களுக்கும் சென்னை காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com