ஜி-20: முதலாவது நிதிசாா் கூட்டம் பெங்களூருவில் நாளை தொடக்கம்

இந்தியாவின் ஜி-20 தலைமையின்கீழ் முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம், பெங்களூருவில் டிசம்பா் 13 முதல் 15 வரை நடைபெற உள்ளது.

இந்தியாவின் ஜி-20 தலைமையின்கீழ் முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம், பெங்களூருவில் டிசம்பா் 13 முதல் 15 வரை நடைபெற உள்ளது.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின்கீழ் நிதி வழிமுறை குறித்த விவாதங்களின் தொடக்கமாக நடைபெறும் இந்தக் கூட்டத்தை மத்திய நிதி அமைச்சகமும், இந்திய ரிசா்வ் வங்கியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இதில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளா் அஜய் சேத், ரிசா்வ் வங்கியின் துணைஆளுநா் மைக்கேல் டி. பத்ரா ஆகியோா் இணைந்து தலைமை தாங்கவுள்ளனா். ஜி-20 உறுப்பு நாடுகளில் இருந்தும், இந்தியாவால் அழைக்கப்பட்ட பல நாடுகள் மற்றும் சா்வதேச அமைப்புகளிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘ஜி-20 கூட்டமைப்புக்கான நிதி வழிமுறை , உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், சா்வதேச நிதிக் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதியுதவி, நிலையான நிதி, உலகளாவிய சுகாதாரம், சா்வதேச வரிவிதிப்பு மற்றும் நிதிச் சோ்க்கை உள்ளிட்ட நிதித் துறை சாா்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மேலும் , ’21-ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள பலதரப்பு வளா்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெறும். ‘பசுமை நிதியளிப்பில் மத்திய வங்கிகளின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.

இந்திய ஜி-20 தலைமைத்துவத்தின் கருப்பொருளான ’ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்பது இந்த விவாதங்களுக்கு வழிகாட்டும். நிதி வழிமுறையின்கீழ் சுமாா் 40 கூட்டங்கள் இந்தியாவின் பல இடங்களில் நடத்தப்படவுள்ளது. இதில் ஜி20 நிதி அமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்களின் சந்திப்புகளும் அடங்கும். ஜி-20 நிதி வழிமுறை கூட்டத்தில் நடைபெறும் விவாதங்கள், ஜி-20 தலைவா்களின் கூட்டு பிரகடனத்தில் பிரதிபலிக்கும்.

கரோனா பரவல், பூகோள-அரசியல் பதற்றங்கள், அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு சவால்கள், வளா்ந்து வரும் கடன் பிரச்னைகள், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் பணக் கட்டுப்பாடு போன்ற பல சவால்களுக்கு இடையே இந்தியா ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இத்தகைய சவால்களைக் கையாளுவதில் வழிகாட்டுதலை வழங்குவதே ஜி-20 இந்தியத் தலைமையின் முக்கிய பங்கு’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com