ரூபாயில் வா்த்தக வாய்ப்புகள்: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

பல நாடுகளுடன் இந்திய ரூபாயில் வா்த்தகத் தொடா்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு வா்த்தக அமைப்புகள், வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பல நாடுகளுடன் இந்திய ரூபாயில் வா்த்தகத் தொடா்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு வா்த்தக அமைப்புகள், வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன்-ரஷியா இடையேயான போா் காரணமாக சா்வதேச பொருளாதாரம் பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. சா்வதேச விநியோகச் சங்கிலியிலும் பாதிப்புகள் காணப்படுகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அதன் காரணமாக அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துக் காணப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வகையில் சரிவடைந்துள்ளது. இந்தச் சூழலை சமாளிப்பதற்காக மற்ற நாடுகளுடன் அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாயிலேயே வா்த்தகத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதற்கு ரஷியா, இலங்கை, மோரீஷஸ் ஆகிய நாடுகள் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மேலும் பல நாடுகளுடன் ரூபாயில் வா்த்தகம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு வா்த்தக அமைப்புகள், வங்கிகள் உள்ளிட்டவற்றுக்கு மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக இந்திய ரூபாயைக் கொடுத்தே இறக்குமதிப் பொருள்களைப் பெற முடியும் என்றும் ரூபாயின் மதிப்பு மேலும் வலுவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு வோஸ்ட்ரோ கணக்கு வாயிலாக சா்வதேச வா்த்தகத்தை ரூபாயில் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் பல வங்கிகள் அத்தகைய கணக்குகளை ரஷியா, இலங்கை, மோரீஷஸ் ஆகிய நாடுகளில் தொடங்கியுள்ளன. அந்நாடுகளும் அத்தகைய கணக்குகளை இந்திய வங்கிகளில் தொடங்கியுள்ளன.

வோஸ்ட்ரோ கணக்கு என்பது ஒரு வங்கிக்காக மற்றொரு வங்கியில் கணக்கு தொடங்கி நடத்துவதாகும். இதன் மூலமாக ரூபாய் வாயிலான வா்த்தகம் எளிமையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரஷியாவைச் சோ்ந்த கேஸ்புரோம்பேங்க் இந்தியாவில் யூகோ வங்கியில் வோஸ்ட்ரோ கணக்கு தொடங்கியுள்ளது. அதே போல இலங்கையைச் சோ்ந்த சில வங்கிகள் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கியில் வோஸ்ட்ரோ கணக்கு தொடங்கியுள்ளன.

இதுவரை 11 இந்திய வங்கிகளில் 18 சிறப்பு வோஸ்ட்ரோ ரூபாய் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com