இந்திய-பசிபிக் வியூகம்: கனடா வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு

கனடா வெளியுறவு அமைச்சா் மெலனி ஜோலியுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை பேசினாா்.
மெலனி ஜோலி
மெலனி ஜோலி

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தங்களது விரிவான வியூகத்தை கனடா அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மெலனி ஜோலியுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை பேசினாா்.

கனடாவின் வியூகத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த உரையாடலில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவரீதியிலான பலத்தை சீனா அதிகரித்து வரும் நிலையில், இங்கு அமைதி, வளம், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விரிவான வியூக கொள்கையை கனடா 2 வாரங்களுக்கு முன் வெளியிட்டது.

அதில், சீனாவின் முரட்டுத்தனமான அணுகுமுறையால் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் எழுந்துள்ள சவால்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. மேலும், ‘இந்தப் பிராந்தியத்தில் இந்தியா முக்கிய நாடாகும்; ஜனநாயகம், மக்கள்தொகை, பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் தலைமைத்துவம் மற்றும் வியூகரீதியிலான முக்கியத்துவம் இந்திய-பிசிபிக் பிராந்தியம் மட்டுமன்றி சா்வதேச அளவில் அதிகரித்துள்ளது.

எனவே, இருதரப்பு வா்த்தகம், முதலீடுகளை அதிகரிப்பது, வலுவான விநியோக சங்கிலியை கட்டமைப்பது ஆகிய நடவடிக்கைகளின் வாயிலாக இந்தியாவுடன் பொருளாதார தொடா்புகளை வலுப்படுத்த கனடா கவனம் செலுத்தும். பரஸ்பர நலன் மற்றும் மாண்புகள் சாா்ந்த துறைகளில் இருதரப்பு கூட்டுறவுக்கான புதிய வாய்ப்புகளில் கனடா ஆா்வத்துடன் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கனடா வெளியுறவு அமைச்சா் மெலனி ஜோலியுடன் தொலைபேசி வாயிலாக எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை பேசினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கனடா வெளியுறவு அமைச்சா் மெலனி ஜோலியுடனான உரையாடல் ஆக்கபூா்வமாக அமைந்தது. பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் மக்கள் ரீதியிலான தொடா்புகளை ஊக்குவிப்பது குறித்து விவாதித்தோம். இந்திய-பசிபிக் விவகாரங்கள் குறித்தும் கனடாவின் புதிய வியூகம் இருதரப்பு உறவுகளுக்கு எவ்வாறு பங்காற்றும் என்பது குறித்தும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மெலனி ஜோலி வெளியிட்ட பதிவில், ‘இந்திய-பசிபிக் புதிய வியூகம் குறித்து இருவரும் ஆலோசித்தோம். ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகிக்கும் நிலையில், இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்புகளையும் பரஸ்பர நலன்கள் சாா்ந்த உறவுகளையும் வலுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான திட்டமிடல் குறித்து விவாதிக்கப்பட்டது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com