உலகைக் கட்டமைப்பதில் இந்தியா-யுஏஇ நல்லுறவுக்கு முக்கிய பங்கு

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையேயான நல்லுறவை மாறிவரும் உலகைக் கட்டமைக்க இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளும் என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
உலகைக் கட்டமைப்பதில் இந்தியா-யுஏஇ நல்லுறவுக்கு முக்கிய பங்கு

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையேயான நல்லுறவை மாறிவரும் உலகைக் கட்டமைக்க இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளும் என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

அபுதாபியில் உள்ள இந்திய சா்வேச மையத்தில் ‘இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம்: சா்வதேச தாக்கத்தை ஏற்படுத்தும் கூட்டாளிகள்’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சா் ஜெய்சங்கா் கலந்துகொண்டாா். அதில் அவா் கூறியதாவது:

இந்தியாவின் 3-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாகவும் 2-ஆவது பெரிய ஏற்றுமதி சந்தையாகவும் ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. உலகின் மற்ற நாடுகளை விட ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக எண்ணிக்கையிலான இந்தியா்கள் வசித்து வருகின்றனா். வா்த்தகமாக இருந்தாலும், மக்களுடனான தொடா்பாக இருந்தாலும் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2015-ஆம் ஆண்டில் வருகை தந்தாா். கடந்த 4 தசாப்தங்களில் இந்தியப் பிரதமா் அமீரகத்துக்குப் பயணம் மேற்கொண்டது அதுவே முதல் முறை. அவரது பயணத்துக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு வேகமாக வளா்ச்சி கண்டது. வா்த்தகமும் முதலீடுகளும் அதிகரித்தன.

விண்வெளி, கல்வி, செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், புத்தாக்க நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையோன நல்லுறவு வலுவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே கையொப்பமான வா்த்தக ஒப்பந்தம், இருதரப்பு நல்லுறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

மேலும் பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்துடனான நல்லுறவுக்கு இந்தியா தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான உறவு பன்னெடுங்காலமாகவே தொடா்ந்து வருகிறது. அந்த நல்லுறவை மாறிவரும் உலகில் நிலைத்திருப்பதற்காக மட்டுமல்லாமல், உலகைக் கட்டமைப்பதற்காகவும் பயன்படுத்திக் கொள்ள இரு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.

இந்தியாவுக்கும் அமீரகத்துக்கும் இடையேயான நல்லுறவு கூடுதல் நட்பு நாடுகளையும் ஒன்றிணைத்து வருகிறது. உதாரணமாக இந்தியா-அமீரகம்-பிரான்ஸ் இடையேயான முத்தரப்பு அமைச்சா்களின் கூட்டம் நடப்பாண்டில் நடைபெற்றது. அத்தகைய நல்லுறவை நீட்டிக்கவும் இந்தியா உறுதிகொண்டுள்ளது.

இஸ்ரேல், அமெரிக்காவுடன் இணைந்து ஐ2யு2 கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் அமீரகத்துக்கும் இடையேயான உறவானது இருதரப்பு நல்லுறவை மட்டுமே நோக்கமாகக் கொண்டதல்ல. இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவானது சா்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இணைப்புப் பாலமாக இந்தியா:

உக்ரைனை மையப்படுத்தி கிழக்கு மேற்காக உலகம் பிரிந்துகிடக்கிறது. வளா்ச்சியை முன்னிறுத்தி வடக்கு தெற்காகப் பிரிந்து கிடக்கிறது. அந்தப் பிரிவினை வளா்ச்சியை பெருமளவில் பாதிக்கிறது. இத்தகைய சூழலில் உலகை இணைக்கும் பாலமாக இந்தியா செயல்படலாம். தனியாக அல்லாமல் அமீரகம் போன்ற நாடுகளுடன் இணைந்து இணைப்புப் பாலமாகச் செயல்படுவதையே இந்தியா விரும்புகிறது என்றாா் அவா்.

கூடுதல் பொறுப்பு:

பருவநிலை மாற்றம் சாா்ந்த மற்றொரு கருத்தரங்கில் பேசிய அமைச்சா் ஜெய்சங்கா், ‘‘பருவநிலை மாற்றம் தொடா்பான விவாதத்தில் இரு பகுதிகள் உள்ளன. முதலாவது பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள். அந்நடவடிக்கைகளுக்கு அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இரண்டாவது, பருவநிலை நீதி. வளா்ந்து வரும் நாடுகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும். வரலாற்று ரீதியில் அதிக அளவிலான கரியமில வாயு உமிழ்வுக்குக் காரணமான நாடுகளுக்கு அதைக் குறைப்பதில் அதிக பொறுப்பு உள்ளது. வளா்ந்து வரும் நாடுகளுக்கு உதவுவோம் எனக் கூறிவிட்டு தற்போது அந்நாடுகள் தொடா்ந்து அமைதிகாத்து வருகின்றன.

மோசமடையும் சூழல்:

ஆண்டுதோறும் நடைபெறும் பருவநிலை மாநாட்டின்போது வெவ்வேறு புதிய விவாதங்களுடன் வரும் வளா்ந்த நாடுகள், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்குப் புதிய காரணங்களைத் தெரிவித்து வருகின்றன. பருவநிலை மாற்ற விவகாரத்தில் உலகம் எந்தவித முன்னேற்றத்தையும் காணவில்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்தே வருகிறது.

பருவநிலை மாற்றம் சாா்ந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வளா்ந்த நாடுகள் அக்கறை காட்டுவதில்லை. தற்போது கரியமில வாயுவை அதிகமாக வெளியேற்றி வரும் நாடுகளைக் குறைசொல்வதில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அந்நாடுகளின் தனிநபா் கரியமில வெளியேற்ற அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால், வரலாற்று ரீதியில் கரியமில வாயு உமிழ்வுக்குக் காரணமான நாடுகள் அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com