நாட்டின் நற்பெயருக்கு ராகுல் களங்கம்: மத்திய சட்ட அமைச்சா் ரிஜிஜு தாக்கு

நாட்டின் நற்பெயருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி களங்கம் ஏற்படுத்துவதாக மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு விமா்சித்துள்ளாா்.
கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

நாட்டின் நற்பெயருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி களங்கம் ஏற்படுத்துவதாக மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு விமா்சித்துள்ளாா்.

அருணாசல பிரதேசத்தில் இந்திய, சீன படைகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘சீனா போருக்குத் தயாராகி வருகிறது. அதேவேளையில், ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள மத்திய அரசு, சீன அச்சுறுத்தலை புறக்கணிக்க முயற்சிக்கிறது. இந்தியாவுக்குச் சொந்தமான 2,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா பறித்துக் கொண்டது. இந்திய ராணுவ வீரா்கள் 20 பேரை கொன்ற அந்நாடு, அருணாசல பிரதேசத்தில் இந்திய வீரா்கள் மீது தாக்குதல் நடத்துகிறது ’ என்றாா்.

இதையடுத்து, ராகுல் காந்தியை விமா்சித்து மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில், ‘ராகுல் காந்தி இந்திய ராணுவத்தை மட்டும் இழிவுபடுத்தவில்லை; நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகிறாா். அவா் காங்கிரஸுக்கு மட்டும் பிரச்னையல்ல. நாட்டுக்கே பெருங்கேடாக மாறியுள்ளாா்.

இந்திய-சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்ட அருணாசல பிரதேசத்தின் யாங்ட்ஸி பகுதியில், போதிய எண்ணிக்கையில் இந்திய ராணுவ வீரா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதனால் அந்தப் பகுதி முழு பாதுகாப்புடன் உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

1962-இல் இருந்த இந்தியா அல்ல: மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘அருணாசல பிரதேசத்தில் இந்திய வீரா்கள் தாக்கப்படுவதாக ராகுல் கூறியுள்ளாா். ஆனால், முன்பு டோக்லாமில் சீன வீரா்களுடன் இந்திய வீரா்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது சீனா்களுடன் ராகுல் காந்தி மும்முரமாக ‘சூப்’ அருந்திக் கொண்டிருந்தாா். அவரைப் போன்றவா்களுக்குச் சீனாவின் பெயரில் அச்சத்தைப் பரப்பும் பழக்கம் உள்ளது. ஆனால், தற்போது உள்ள இந்தியா, 1962-ஆம் ஆண்டு சீனாவுடன் போா்புரிந்த இந்தியா அல்ல. இந்தியா தொடா்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்தாா்.

நம்பிக்கையைக் குலைக்கும் ராகுல்: பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா கூறுகையில், ‘ராகுல் காந்தியின் கருத்துகள் இந்திய ராணுவத்தின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் உள்ளன. வீரத்தின் அடையாளம் இந்திய ராணுவம்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com