
naveen-patnaik2075719
புவனேஸ்வர் (ஒடிஸா) : ஒடிஸா மாநிலத்தின் 19 நகரங்களில் 24 மணி நேரமும் நேரடியாக மாநகராட்சி குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் இந்த நகரங்களில் உள்ள சுமார் 5.5 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் நவீன் பட்நாயக் பேசுகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் எனபது தனது நீண்ட காலக் கனவாகும் என்றும், அது தனது அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும் கூறினார்.
குடிநீரே வாழ்க்கை என்பதால் அந்த குடிநீரை பாதுகாப்பானதாக வழங்குவது பொது சுகாதாரத்தின் முக்கிய அம்சமாகும். புதிய ஒடிஸாவை உருவாக்குவதற்கும், மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதில் முன்னோடியாகவும், அதனை மக்களிடமே கொண்டு செல்வதற்கு எனது அரசு உறுதிபூண்டுள்ளது. இந்திய தர நிர்ணய அலுவலகத்தின் தர அளவுருக்களை கடைபிடித்து 24 மணி நேரமும் மாநகராட்சி குழாயில் இருந்து நேரடியாகக் குடிநீர் வழங்குவதில் நமது மாநிலத்தின் 19 நகரங்கள் சர்வதேச நகரங்களின் மதிப்புமிக்க பட்டியலில் இணைவது மிகவும் பெருமைக்குரிய விஷயம்," என்று அவர் கூறினார்.
மேலும், குடிநீர் இவ்வளவு எளிதாகக் கிடைப்பதால், அதன் முக்கியத்துவத்தை மறந்து அதனை வீணாக்க வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்திய பட்நாயக், குடிநீர் ஒரு விலைமதிப்பற்ற மற்றும் முக்கியமான இயற்கை வளமாகும், எனவே, ஒரு துளியைக் கூட வீணாக்காமலும், மாசுப்படுத்தாமலும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.