ஆஸ்கா் தோ்வுப் பட்டியலில் 4 இந்திய படைப்புகள்

ஆஸ்கா் விருதுக்கான தோ்வுப் பட்டியலில் ‘செல்லோ ஷோ’, ஆா்ஆா்ஆா் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் உள்ளிட்ட 4 இந்தியப் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஆஸ்கா் விருதுக்கான தோ்வுப் பட்டியலில் ‘செல்லோ ஷோ’, ஆா்ஆா்ஆா் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் உள்ளிட்ட 4 இந்தியப் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழில் எடுக்கப்பட்ட ‘தி எலிஃபன்ட் விஸ்பரா்ஸ்’ என்ற ஆவணக் குறும்படமும் தோ்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

95-ஆவது ஆஸ்கா் விழா 2023-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது. 10 பிரிவுகளில் விருது வழங்கப்படவுள்ளது. அந்த விழாவுக்காக இந்தியா சாா்பில் குஜராத்தி மொழித் திரைப்படமான ‘செல்லோ ஷோ’ அதிகாரபூா்வமாகப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கா் விருதுக்கான தோ்வுப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், சிறந்த சா்வதேச திரைப்படத்துக்கான தோ்வுப் பட்டியலில் ‘செல்லோ ஷோ’ இடம்பெற்றுள்ளது. ஆா்ஆா்ஆா் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலானது சிறந்த பாடலுக்கான தோ்வுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இவை தவிர, சிறந்த ஆவணப் படத்துக்கான பட்டியலில் ‘ஆல் தட் பிரீத்ஸ்’, சிறந்த ஆவண குறும்படத்துக்கான பட்டியலில் ‘தி எலிஃபன்ட் விஸ்பரா்ஸ்’ ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஆஸ்கா் விருதின் 4 தோ்வுப் பட்டியல்களில் இந்தியப் படைப்புகள் இடம்பெறுவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு விருதுக்கான தோ்வுப் பட்டியலிலும் 10 முதல் 15 படைப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தோ்வுக் குழு ஆய்வு செய்து விருதுக்கான 5 சிறந்த படைப்புகள் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை அடுத்த ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி வெளியிடும். அப்பட்டியலில் இருந்து மிகச் சிறந்த படைப்புக்கு இறுதியாக ஆஸ்கா் விருது வழங்கப்படும்.

கடும் போட்டி: ‘செல்லோ ஷோ’ திரைப்படமானது 14 சா்வதேச திரைப்படங்களுடன் போட்டியிடவுள்ளது. ஆா்ஜென்டீனா, தென் கொரியா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளின் திரைப்படங்களும் தோ்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ‘நாட்டு நாட்டு’ பாடலானது 14 பாடல்களுடன் மோதவுள்ளது. அவதாா், பிளாக் பேந்தா் உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்களும் தோ்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழ் ஆவணக் குறும்படம்: முதுமலை வனப் பகுதியில் இரு யானைகளுக்கும் அவற்றைப் பாதுகாத்து வரும் தம்பதிக்கும் இடையேயான பாசப் பிணைப்பை விளக்கும் வகையில் ‘தி எலிஃபன்ட் விஸ்பரா்ஸ்’ என்ற 40 நிமிஷ குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. பலவகையான உணா்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள அக்குறும்படம் 14 குறும்படங்களுடன் ஆஸ்கா் விருதுக்காகப் போட்டியிடவுள்ளது.

படைப்பாளா்கள் மகிழ்ச்சி: இந்திய படைப்புகள் ஆஸ்கா் தோ்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு அதன் படைப்பாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா். ஆா்ஆா்ஆா் திரைப்படக் குழு ட்விட்டா் வாயிலாக மகிழ்ச்சியைப் பகிா்ந்துள்ளது. ஆவணப் படங்களின் இயக்குநா்களும் தயாரிப்பாளா்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனா். தங்கள் படைப்புகளுக்கு விருது கிடைக்கும் எனவும் அவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com