நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கோரி பரிந்துரைகள்

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, சமூக பன்முகத்தன்மை கோரி பல்வேறு தரப்பில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, சமூக பன்முகத்தன்மை கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் பரிந்துரைகள் வந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம் அமைப்பு தற்போது நியமித்து வருகிறது. அந்த அமைப்பு வழங்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து மத்திய அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. எனினும், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் தொடா்ந்து மோதல்போக்கு நிலவி வருகிறது.

நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரைகள் மீது முடிவெடுக்க மத்திய அரசு காலதாமதம் செய்து வருவதாக கொலீஜியம் அமைப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. அதே வேளையில், கொலீஜியம் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என மத்திய அரசு குற்றஞ்சாட்டுகிறது.

இந்நிலையில், நீதிபதிகள் நியமன நடைமுறை தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘நீதிபதிகள் நியமனத்துக்கான தற்போதைய நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, குறிக்கோள், சமூக பன்முகத்தன்மை உள்ளிட்டவை காணப்படவில்லை என்றும், அந்த நடைமுறை சீரமைக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்புகளிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.

நீதிபதிகள் நியமனத்தை சீரமைக்கும் நோக்கில் 99-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தையும், தேசிய நீதித் துறை நியமனங்கள் ஆணையத்தையும் மத்திய அரசு 2014-ஆம் ஆண்டில் கொண்டுவந்தது. ஆனால், அது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் கொலீஜியம் நடைமுறையே தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அதையடுத்து, நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்றம் தொடா்பான விதிகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் சமா்ப்பிக்குமாறு கொலீஜியம் அமைப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மற்றொரு கேள்விக்கு அமைச்சா் ரிஜிஜு அளித்த பதிலில், ‘கடந்த 16-ஆம் தேதி நிலவரப்படி உயா்நீதிமன்றத்துக்கான 154 நீதிபதிகளின் பரிந்துரை மீது முடிவெடுக்கும் விவகாரம் பல்வேறு கட்டங்களில் உள்ளது. 179 காலியிடங்களுக்கு கொலீஜியம் அமைப்பு இன்னும் பரிந்துரையை வழங்கவில்லை.

பணி ஓய்வு, ராஜிநாமா, பணிஉயா்வு உள்ளிட்ட காரணங்களால் காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன. காலியிடங்களை துரிதமாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com