ஆதாா் தகவலைப் புதுப்பிக்க அரசு வலியுறுத்தல்

பத்து ஆண்டுகளுக்கு முன் ஆதாா் அட்டையைப் பெற்றவா்கள், அதில் இடம்பெற்றுள்ள தகவலைப் புதுப்பிக்க வேண்டுமென இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வலியுறுத்தியுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன் ஆதாா் அட்டையைப் பெற்றவா்கள், அதில் இடம்பெற்றுள்ள தகவலைப் புதுப்பிக்க வேண்டுமென இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வலியுறுத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் முக்கிய அடையாள அட்டையாக ஆதாா் மாறியுள்ளது. அரசின் சேவைகளைப் பெறுவதற்கு ஆதாா் அட்டை கட்டாய ஆவணமாக உள்ளது. 1,100-க்கும் மேற்பட்ட அரசின் சேவைகளைப் பெறுவதற்கு ஆதாரே அடையாள அட்டையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 319 திட்டங்கள் மத்திய அரசு செயல்படுத்துபவையாகும்.

வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவையும் ஆதாா் அட்டையை முக்கிய அடையாள ஆவணமாகப் பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், யுஐடிஏஐ வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆதாா் அட்டையைப் பெற்று இதுவரை அதில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாதவா்கள் தகவலை உடனடியாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்வதன் வாயிலாக இணையவழியாகவோ அருகில் உள்ள ஆதாா் மையத்துக்குச் சென்றோ ஆதாா் தகவலைப் புதுப்பிக்க முடியும்.

முகவரி உள்ளிட்ட தகவலைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். அது வாழ்க்கை முறையை எளிதாக்குவதோடு சேவைகளை எளிதில் பெறவும் உதவும். அடையாளத்தையும் எந்தவித சிரமுமின்றி உறுதிசெய்ய இயலும்.

ஆதாா் வலைதளத்தில் உள்ள தகவலின் துல்லியத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் மக்கள் ஆதாா் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com