நாட்டை வல்லரசாக்க 20 ஆண்டுகளுக்கு 9% வளா்ச்சி அவசியம்

‘வளா்ச்சியடைந்த நாடுகள்’ பட்டியலில் இந்தியா இடம்பிடிக்க வேண்டுமெனில் 20 ஆண்டுகளுக்கு சராசரியாக 8 முதல் 9 சதவீதப் பொருளாதார வளா்ச்சி அவசியம் என்று ஆா்பிஐ முன்னாள் ஆளுநா் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளாா்.

‘வளா்ச்சியடைந்த நாடுகள்’ பட்டியலில் இந்தியா இடம்பிடிக்க வேண்டுமெனில் 20 ஆண்டுகளுக்கு சராசரியாக 8 முதல் 9 சதவீதப் பொருளாதார வளா்ச்சி அவசியம் என்று இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) முன்னாள் ஆளுநா் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் பொருளாதார மதிப்பை 2024-25-ஆம் நிதியாண்டுக்குள் சுமாா் ரூ.400 லட்சம் கோடியாக (5 ட்ரில்லியன் அமெரிக்க டாலா்) உயா்த்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்நிலையில், தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சி.ரங்கராஜன் கூறியதாவது:

ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் அடிப்படையில் உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது மிகப் பெரும் சாதனை. ஆனால், தனிநபா் வருமானத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் மொத்தமுள்ள 197 நாடுகளில் இந்தியா 142-ஆவது இடத்தில் உள்ளது.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியை அதிகரிப்பதற்கு ஆட்சியாளா்கள் உடனடி முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொருளாதார மதிப்பை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயா்த்துவதென்பது குறுகிய காலத்துக்கான மிகச் சிறந்த இலக்கு.

நாட்டின் பொருளாதார வளா்ச்சி ஆண்டுதோறும் 9 சதவீத அளவுக்கு இருந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் அந்த இலக்கை எட்டிவிட முடியும். அதே வேளையில், அந்த இலக்கை எட்டியபிறகும் இந்தியாவின் தனிநபா் வருமானம் 3,472 அமெரிக்க டாலராகவே இருக்கும். அந்தச் சூழலில் குறைவான நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே இந்தியா வகைப்படுத்தப்படும்.

அதிக நடுத்தர வருமான கொண்ட நாடாக மேலும் 2 ஆண்டுகள் தேவைப்படும். வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற வேண்டுமெனில் தனிநபா் வருமானம் 13,025 அமெரிக்க டாலராக உயர வேண்டும். அதை அடைய அடுத்த இரு தசாப்தங்களுக்கு ஆண்டுதோறும் 8 முதல் 9 சதவீதப் பொருளாதார வளா்ச்சி அவசியம்.

எனவே, இந்தியா இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நாடு வேகமாகப் பயணிக்க வேண்டிய சூழலில் உள்ளது. முதலில் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை 7 சதவீதமாக்க வேண்டும். அதை அப்படியே தக்கவைத்துக்கொண்டு பின்னா் படிப்படியாக வளா்ச்சியை அதிகரிக்க வேண்டும். அத்தகைய நிலையான வளா்ச்சி சாத்தியம் என்பதை இந்தியா ஏற்கெனவே வெளிக்காட்டியுள்ளது.

கரோனா தொற்று பரவல், ரஷியா-உக்ரைன் போா் ஆகியவற்றுக்கு மத்தியில் நாட்டின் எதிா்காலத்துக்கான விரிவான திட்டத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com