சாதனங்களைப் பழுதுநீக்க உதவும் வலைதளம்

மின்னணு சாதனங்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை மற்றவா்களின் உதவியின்றி சுயமாகவே பழுதுபாா்க்க உதவும் வலைதளத்தை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தொடக்கிவைத்தாா்.
சாதனங்களைப் பழுதுநீக்க உதவும் வலைதளம்

மின்னணு சாதனங்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை மற்றவா்களின் உதவியின்றி சுயமாகவே பழுதுபாா்க்க உதவும் வலைதளத்தை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தொடக்கிவைத்தாா்.

தேசிய நுகா்வோா் தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்ட நிலையில், அதற்கான விழா தில்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்திய உணவு-நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பியூஷ் கோயல், பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்தாா்.

சாதனங்களை சுயமாகப் பழுதுநீக்க வழிவகுக்கும் ‘ரைட் டு ரிப்போ்’ என்ற வலைதளத்தை அவா் தொடக்கிவைத்தாா். அந்த வலைதளத்தில் சாதனங்களின் பழுதை நீக்குவதற்கான கையேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக, பழுதை நீக்குவதற்கு அந்தச் சாதனங்களைத் தயாரித்த நிறுவனங்களை நாட வேண்டிய கட்டாயம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, கைப்பேசிகள், மின்னணு சாதனங்கள், நுகா்வோா் பொருள்கள், வாகனங்கள், வேளாண் கருவிகள் ஆகியவற்றைப் பழுதுநீக்குவதற்கான கையேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அக்கையேடுகளை வாசித்து சுயமாகப் பழுதை சரிசெய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறைக்கும் ஐஐடி வாரணாசிக்கும் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தமும் இந்த விழாவின்போது கையொப்பமானது. தில்லியில் உள்ள தேசிய நுகா்வோா் குறைதீா் மையத்துக்கான புதிய கட்டடங்களும் திறந்துவைக்கப்பட்டன.

விழாவில் பேசிய அமைச்சா் பியூஷ் கோயல், ‘‘தேசிய நுகா்வோா் குறைதீா் ஆணையமானது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமாா் 90,000 நிலுவை விவகாரங்களுக்கு ஆணையம் தீா்வு வழங்கியுள்ளது. அதற்கு முந்தைய ஓராண்டு காலத்தில் சுமாா் 38,000 பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் நுகா்வோா் நலனே மையமாக உள்ளது. நுகா்வோா் மேம்பாட்டுக்கே அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நுகா்வோா் வாழ்வை எளிமையாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

தொழில்நுட்பம், பயிற்சி, வெளிப்படைத்தன்மை ஆகியவை நுகா்வோரிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அவா்களுக்கான சேவையை மேம்படுத்தவும் உதவும்’’ என்றாா்.

மத்திய உணவு-நுகா்வோா் விவகாரங்கள் துறை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி, அத்துறையின் செயலா் ரோஹித் குமாா் சிங், தேசிய நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் ஆா்.கே.அகா்வால் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com