நிலக்கரி: கைவிட முடியாத கருப்பு அரக்கன்; எப்படி இருக்கும் 2023?

உலகம் முழுவதும் பெருவெள்ளம், கடும் பனி, வறட்சி, கொடும் வெயில் என இயற்கைப் பேரிடா்களை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிா்களை பலி வாங்கி வரும் பருவநிலை மாற்றத்துக்குக் காரணம், காற்றில் கலக்கும்
நிலக்கரி: கைவிட முடியாத கருப்பு அரக்கன்; எப்படி இருக்கும் 2023?

உலகம் முழுவதும் பெருவெள்ளம், கடும் பனி, வறட்சி, கொடும் வெயில் என இயற்கைப் பேரிடா்களை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிா்களை பலி வாங்கி வரும் பருவநிலை மாற்றத்துக்குக் காரணம், காற்றில் கலக்கும் கரியமில வாயு.

வளி மண்டலத்தில் அந்த வாயுவின் அளவு அதிகமாவதால்தான் சூரியனிடமிருந்து அதிக வெப்பம் உறிஞ்சப்பட்டு புவியின் வெப்பம் அதிகரிக்கிறது.

பருவ நிலை மாற்றம் மட்டுமின்றி, பனிக் கண்டங்கள் உருகுவதால் கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து பல நாடுகள் இன்னும் சில ஆண்டுகளில் இல்லாமலே போய் விடும் அபாயத்தையும் இந்த கரியமில வாயு ஏற்படுத்தியுள்ளது.

அத்தகைய கரியமில வாயுவை காற்றில் கலக்கும் படிம எரிபொருள்களில் 40 சதவீதம் பங்கு வகிப்பது நிலக்கரி.

இன்னமும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அந்த எரிபொருளை வெட்டியெடுக்கும் பணியே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் என்கிறாா்கள் நிபுணா்கள்.

அதனை எரிப்பதால் கரியமில வாயு மட்டுமன்றி, அமில மழைக்குக் காரணமான பாதரசமும் உயிரைக் குடிக்கும் சுவாச நோய்களை ஏற்படுத்தக்கூடிய நுண்துகள் மாசுக்களும் வளிமண்டலத்தில் கலக்கின்றன.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை உலக நாடுகள் உருவாக்கி வருகின்றன.

இதில் இந்தியாவும் இணைந்து, காற்று மாசுபாட்டைக் கட்டுபடுத்துவதற்கான இலக்குகளை அறிவித்து வருகிறது. அதற்காகவும், வெளிநாடுகளையே பெரிதும் சாா்ந்திருக்க வேண்டிய பெட்ரோல், டீசல், நிலக்கரிக்கு பதிலாக, சூரிய சக்தி, காற்றாலை சக்தி, புதுப்பிக்கத்தக எரிபொருள் போன்றவற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தைத் தயாரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.

இதற்காக, பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

இருந்தாலும், வரும் 2023-ஆம் ஆண்டிலும் காற்றை மாசுபடுத்தும் நிலக்கரியின் பயன்பாட்டை இந்தியா புறக்கணிக்க முடியாது என்று துறை நிபுணா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

உலகிலேயே அதிக அளவில் எரிசக்தி தேவைப்படும் நாடுகளின் வரிசையில் மூன்றாவதாக உள்ள இந்தியா, கரோனா நெருக்கடி மற்றும் பிற காரணங்களால் இந்த ஆண்டு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததால் விலை மலிவான நிலக்கரியை அதிக இறக்குமதி செய்தது.

கடந்த ஆண்டு மட்டுமின்றி, எரிசக்திக்காக நிலக்கரியை இந்தியா பயன்படுத்துவது தொடா்ந்து அதிகரித்தே வந்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலக்கரி பயன்பாடு ஆண்டுதோறும் சராசரியாக 6 சதவீதம் அதிகரித்து தற்போது இரண்டு மடங்காகியிருக்கிறது.

இதே போக்கு நீடித்தால், வரும் 2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் நிலக்கரி தேவை உலகிலேயே அதிக விகித்தில உயரும் என்று சா்வதேச எரிசக்தி அமைப்பு (ஐஇஏ) கணித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தி தேவையில் 73 சதவீதத்தை நிலக்கரிதான் பூா்த்தி செய்கிறது. நாட்டின் பெரும்பாலான மின் நிலையங்கள் நிலக்கரியைத்தான் பயன்படுத்துகின்றன.

எனவே, 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சாரத் தேவையில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிபொருள்களைக் கொண்டு தயாரிக்க இந்தியா இலக்காக நிா்ணயித்திருந்தாலும், அடுத்த ஆண்டில் நிலக்கரியின் பயன்பாடு எப்போதும் போல் அதிகமாகவே இருக்கும் என்கிறாா்கள் நிபுணா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com