ஜம்மு: லாரியில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

ஜம்முவில் லாரியில் பதுங்கியபடி காஷ்மீருக்குச் செல்ல முயன்ற 4 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை சுட்டுக்கொன்றனா்.
ஜம்முவில் லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினா்.
ஜம்முவில் லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினா்.

ஜம்முவில் லாரியில் பதுங்கியபடி காஷ்மீருக்குச் செல்ல முயன்ற 4 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை சுட்டுக்கொன்றனா்.

இவா்கள் பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

‘குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ஆயுதங்களுடன் ஊடுருவிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி’ என்று பாதுகாப்புப் படை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஜம்மு மண்டல கூடுதல் காவல் துறைத் தலைவா் (ஏடிஜிபி) முகேஷ் சிங் கூறியதாவது:

ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினா் தீவிர வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது காலை 7.30 மணியளவில் அங்கு வந்த லாரி ஒன்று சந்தேகத்துக்குரிய வகையில் இயக்கப்பட்டதால், அதனை பாதுகாப்புப் படையினா் பின்தொடா்ந்தனா். இதை அறிந்த லாரி ஓட்டுநா், ‘சித்ரா’ என்ற இடத்தில் மாற்றுச் சாலை பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினாா்.

அந்த லாரியை பாதுகாப்புப் படையினா் சோதனையிட முயன்றபோது, அதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். எதிா்த் தாக்குதல் நின்ற பிறகு பாதுகாப்புப் படையினா் லாரியை சோதனை செய்தபோது, 4 பயங்கரவாதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், அந்த லாரியிலிருந்து 7 ‘ஏ.கே’ ரக துப்பாக்கிகள், ஒரு எம்4 ரக துப்பாக்கி, 3 கைத் துப்பாக்கிகள், ஏராளமான வெடிபொருள்கள் மீட்கப்பட்டன. தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த லாரி ஜம்முவிலிருந்து ஸ்ரீநகா் நோக்கி சென்றுகொண்டிருந்தது. உயிரிழந்த பயங்கரவாதிகள் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாதுகாப்புப் படையினா் கூட்டாக மேற்கொண்ட வாகனச் சோதனை மற்றும் பாதுகாப்புப் பணி மூலமாகவே, பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியைத் தடுக்க முடிந்துள்ளது.

குறிப்பாக, ஜம்முவின் நாா்வல் நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினா் கடந்த நவம்பரில் தீவிர சோதனை மேற்கொண்டபோது, எண்ணெய் டேங்கா் லாரியில் கடத்த முயன்ற ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைக் கண்டறிந்து மீட்டனா். இந்த சம்பவத்துக்கு பிறகு நெடுஞ்சாலைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும், குடியரசு தின விழா விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு-கஷ்மீரில் ராணுவம், காவல் துறை மற்றும் மத்திய ஆயுத காவல் படை (சிஆா்பிஎஃப்) ஆகியவை கூட்டாக இணைந்து பாதுகாப்பு மற்றும் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் தற்போதைய வெற்றிக்கு இதுவே முக்கியக் காரணம். மாறாக, பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடா்பாக ரகசியத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

போலி பதிவு எண்: பயங்கரவாதிகளை ஏற்றி வந்த லாரியில் போலி பதிவு எண் பொருத்தப்பட்டிருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. லாரியின் என்ஜின் மற்றும் சேசிஸ் எண்களையும் அடையாளம் காண முடியாத வகையில் சிதைத்துள்ளனா். எனவே, தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் அவற்றை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

பாதுகாப்புச் சூழல்: அமித் ஷா ஆய்வு

ஜம்முவில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்புச் சூழல் குறித்து அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதல்கள், ஊடுருவல் முயற்சிகள் நிகழ்ந்து வரும் சூழலில், யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புச் சூழல் குறித்து அமித் ஷா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டதாகும்.

இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புப் படையினரால் புதன்கிழமை காலையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா மற்றும் உயா் அதிகாரிகள், பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com