இந்தியா-சீனா உறவு இயல்பான நிலையில் இல்லை

இந்தியா-சீனா இடையேயான உறவு இயல்பான நிலையில் இல்லை எனத் தெரிவித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், முக்கிய விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்றாா்.
இந்தியா-சீனா உறவு இயல்பான நிலையில் இல்லை

இந்தியா-சீனா இடையேயான உறவு இயல்பான நிலையில் இல்லை எனத் தெரிவித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், முக்கிய விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்றாா்.

மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் நாட்டுக்கு வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் முதல்முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினரிடம் வெள்ளிக்கிழமை அவா் உரையாற்றினாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘‘இந்தியா-சீனா இடையேயான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை சீனா தன்னிச்சையாக மாற்ற முயன்று வருவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் இயல்பான நிலை காணப்படவில்லை. தேசப் பாதுகாப்பு சாா்ந்த முக்கிய விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.

எல்லைப் பகுதிகளில் இந்தியா சந்தித்து வந்த சவால்கள், கரோனா தொற்று பரவல் காலத்தில் மேலும் தீவிரமடைந்தன. அண்டை நாடுகள் அனைத்துடனும் நல்லுறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது. ஆனால், பயங்கரவாதத்தைத் தவிா்த்துவிட்டும் அதைக் கண்டுகொள்ளாமலும் நல்லுறவை ஏற்படுத்த முடியாது. அதில் இந்தியா தெளிவாக உள்ளது.

இந்தியாவைப் போல வேறெந்த நாடும் பயங்கரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டதில்லை. பயங்கரவாதத்தை இயல்பான நடவடிக்கை என இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. பயங்கரவாதத்தின் மூலமாக அச்சுறுத்தி, பேச்சுவாா்த்தையில் பங்கேற்குமாறு கட்டாயப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது’’ என்றாா்.

அருணாசலின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதியில் சீன ராணுவத்தினா் டிசம்பா் 9-ஆம் தேதி அத்துமீறலில் ஈடுபட்டனா். அதை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தினா். அப்போது ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் வீரா்களுக்குக் காயம் ஏற்பட்டது.

கிழக்கு லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூனில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போதிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே தொடா்ந்து மோதல்போக்கு நீடித்து வருகிறது.

இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே 17 சுற்று பேச்சுவாா்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், எல்லை விவகாரத்துக்கு இதுவரை உறுதியான தீா்வு எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com