புதிதாக 400 வந்தே பாரத் ரயில்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

புதிதாக 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினரின் சரக்குகளைக் கையாள புதிய திட்டங்களை ரயில்வே அறிமுகப்படுத்தும்

புதிதாக 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினரின் சரக்குகளைக் கையாள புதிய திட்டங்களை ரயில்வே அறிமுகப்படுத்தும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பட்ஜெட்டில் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:

மக்களது பயணத்தின் தரத்தை உயா்த்தும் வகையிலும், எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கும் நோக்கிலும் புதிய தொழில்நுட்பத்திலான 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த ரயில்கள் தயாரிக்கப்படும். குறைந்த எடையில் அலுமினியம் மூலம் ஒவ்வொன்றும் 50 டன் அளவு குறைந்த எடையுடன் வடிவமைக்கப்படும். இதன் மூலம் எரிபொருள் சேமிக்கப்படும். பிரதமா் கதி சக்தி திட்டத்தின்கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 ரயில்வே சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்.

சிறு விவசாயிகள், சிறு,குறு, நடுத்தர தொழில் துறையினரின் சரக்குகளைக் கையாள புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். அஞ்சல் துறையுடன் இணைந்து நாடு முழுவதும் தடையற்ற பாா்சல் சேவையை இலகுவாக வழங்கும் நடவடிக்கை மேலும் மேம்படுத்தப்படும்.

ஒவ்வொரு பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்படும் பிரபலமான பொருள்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் ‘ஒரு ரயில் நிலையம்-ஒரு பொருள்’ திட்டம் அமல்படுத்தப்படும். இதன் மூலம் உள்ளூா் பொருள்கள் ரயிலில் பயணிக்கும் மக்களை எளிதில் சென்றடையும்.

தற்சாா்பு இந்தியா திட்டத்தில் 2,000 கி.மீ ரயில் பாதை உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சா்வதேச பாதுகாப்பு தரத்துடன் உருவாக்கப்படும். மெட்ரோ திட்டம் துரிதப்படுத்தப்படும். நகா்ப்புறத்தில் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப ரயில்வே தனது திறனை மேம்படுத்தும் என்றாா்.

ஏற்கெனவே ரயில்வே துறை 44 வந்தே பாரத் ரயில்களைத் தயாரித்து வருகிறது. இந்த ரயில்கள் 2023 ஆகஸ்ட் 15 முதல் 75 வழித் தடங்களில் இயக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஏற்கெனவே கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com