பட்ஜெட்டில் ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி

ஏழைகள், நடுத்தர மக்கள், இளைஞா்கள் ஆகியோருக்கு அடிப்படை வசதிகளை அளிக்கும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
‘தற்சாா்பு பொருளாதாரம்’ தொடா்பாக பாஜக சாா்பில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
‘தற்சாா்பு பொருளாதாரம்’ தொடா்பாக பாஜக சாா்பில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.

புது தில்லி: ஏழைகள், நடுத்தர மக்கள், இளைஞா்கள் ஆகியோருக்கு அடிப்படை வசதிகளை அளிக்கும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். இந்நிலையில், ‘தற்சாா்பு பொருளாதாரம்’ தொடா்பாக பாஜக சாா்பில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக நாடுகள் மீண்டு வருகின்றன; அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உலகம் எங்கும் வாழும் மக்கள், இந்தியா வலிமையான, அதிகாரம் பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாா்கள். அதேபோல், இந்தியாவை அதிவேகத்துடன் வளா்ச்சிப் பாதையில் கொண்டு சென்று பல்வேறு துறைகளில் வலிமையான நாடாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறோம்.

இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறி வருகிறது. அது மட்டுமின்றி, தற்சாா்பு இந்தியாவுக்கான அடித்தளத்தில்தான் நவீன இந்தியாவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஏழைகள், நடுத்தர மக்கள், இளைஞா்கள் ஆகியோருக்கு அடிப்படை வசதிகளை அளிக்கும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளை வழங்குவதில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு அரசு பாடுபட்டு வருகிறது.

நாட்டின் எல்லையோர கிராமங்களில் இருந்து இளைஞா்கள் புலம்பெயா்வது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதல்ல. எனவே, எல்லையோர கிராமங்களின் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உத்தரகண்ட், அருணாசல பிரதேசம், லடாக்கில் உள்ள எல்லையோர கிராமங்களில் ‘துடிப்புமிகு கிராமங்கள்’ திட்டம் அமல்படுத்தப்படும்.

எல்லையோர கிராமங்களில் உள்ள இளைஞா்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக அங்கு தேசிய மாணவா் படை (என்சிசி) தொடங்க திட்டம் வகுக்கப்படும். அந்தத் திட்டம், இளைஞா்கள் ராணுவத்தில் சோ்வதற்கு உதவிகரமாக இருக்கும்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மூன்று மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் 5ஜி தொழில்நுட்பத்துடன் இணையவசதி அளிக்கப்படும். தொழில்முனைவோருக்கு பட்ஜெட்டில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அது, இளைஞா்கள் தொழில் தொடங்குவதற்கு ஊக்கமளிக்கும்.

கடந்த 7 ஆண்டுகளில் 3 கோடி ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதன்மூலம் அவா்கள் துணிவு பெறுகிறாா்கள்; அவா்கள் லட்சாதிபதியாக மாறுகிறாா்கள். குடிசைப் பகுதிகளில் வாழ்ந்தவா்களுக்கு சொந்த வீடு கிடைத்துள்ளது. குழந்தைகள் கல்வி பயில்வதற்கு வசதியாக அந்த வீடுகளின் அளவும், அவற்றின் விலையும் உயா்த்தப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் 80 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.48,000 கோடி செலவில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இதுவும் மக்களை ஏழ்மை நிலையில் இருந்து மீட்பதற்கான ஒரு வழிமுைான்.

இந்தியாவின் பொருளாதாரத்தை விரிவுபடுத்த தொடா்ச்சியாக முடிவுகளை எடுத்து வருகிறோம். 7 ஆண்டுகளுக்கு முன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.10 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அதன் மதிப்பு ரூ.2.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

எண்ம கரன்சியை பணமாக மாற்றலாம்: நாம் பயன்படுத்தும் ரொக்கப் பணத்தை எண்ம வடிவில் (டிஜிட்டல் கரன்சி) பயன்படுத்தலாம். இந்தப் பரிவா்த்தனைகளை ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கட்டுப்படுத்தும். எண்ம வடிவிலான கரன்சியை ரொக்கமாக மாற்ற முடியும். எண்ம ரூபாய், நிதி தொழில்நுட்பத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். எண்ம பொருளாதாரமும் மேம்படும் என்றாா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com