கரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் கட்டாயமில்லை என்றும், ஆதார் அடையாள அட்டை இல்லாமல் 87 லட்சம் பேருக்கும் கரோனாதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் கட்டாயமில்லை என்றும், ஆதார் அடையாள அட்டை இல்லாமல் 87 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தடுப்பூசி செலுத்த மக்களிடம் ஆதார் அட்டையை கேட்டு வலியுறுத்த வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது. 

மத்திய அரசின் யுஐடிஏஐ அமைப்பு கடந்த ஆண்டு மே மாதம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயமில்லை என அறிவித்தது. ஆதார் இல்லாவிட்டாலும் அவருக்கான அத்தியாவசிய சேவைகள், பலன்கள் கிடைப்பதை மறுக்கக்கூடாது என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 

ஆனால் சில கரோனா தடுப்பூசி மையங்களில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயம் என சொல்வதாக புகார்கள் எழுந்தன. 

இதையடுத்து புணேவைச் சேர்ந்த வழக்குரைஞரும் சமூக ஆர்வலருமான சித்தார்த்சங்கர் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

மனுவில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் நடைமுறைச் செயல்களுக்கு நிறைய வித்தியாசம் இருப்பதாகவும், தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை கொண்டுவர சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுவதாகவும் மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

"மனுவில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள கூட ஆதார் விவரங்கள் கோரப்படவில்லை என்றும், ஒன்பது ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைத் தாக்கல் செய்யலாம் என்றும், தடுப்பூசி செலுத்த ஆதார் கட்டாயமில்லை. மனுதாரரின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றும் என உறுதி கொடுத்ததுடன், இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மீண்டும் அறிவுறுத்துகிறோம் என்று தெரிவித்திருந்தது. 

அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சர்மா, ஆதார் மட்டும் முன் நிபந்தனை இல்லை என்றும், ஆதார் உள்ளிட்ட எந்த அடையாள அட்டையும் இல்லாத 87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், நாட்டில் உள்ள 16 மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி என்ற நிலையை எட்டியுள்ளதாகவும், 4 மாநிலங்களில் சுமார் 96.99 சதவிகிதம் என்ற நிலையை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மயங்க் கிஷிர்சாகர், தடுப்பூசி மையங்களில் ஆதார் அட்டை கேட்கக் கூடாது என்று வாதிட்டார்.

இதையடுத்து தடுப்பூசி செலுத்த மக்களிடம் ஆதார் அட்டையை கேட்டு வலியுறுத்த வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் சுகாதார அமைச்சகத்தின் கொள்கையின்படி செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நீதிபதிகள் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com