களத்தில் இறங்கும் கேஜரிவாலின் மனைவியும் மகளும்...காரணம் இதுதான்

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், தூரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
கேஜரிவாலின் மனைவி சுனிதா
கேஜரிவாலின் மனைவி சுனிதா

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா மற்றும் மகள் ஹர்ஷிதா அடுத்த வாரம் நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரசாரம் செய்யவுள்ளனர். 

இதுகுறித்து கேஜரிவாவின் மனைவி இன்று காலை ட்விட்டரில், "நாளை எனது மைத்துனர் பகவந்த் மானிக்கு வாக்கு கேட்க எனது மகளுடன் தூரிக்கு (சங்ரூர் மாவட்டத்தில்) செல்கிறேன்.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், தூரி தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது, அவர் சங்ரூர் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். 

கடந்த மாதம், கட்சியின் முதல்வர் வேட்பாளரை மக்களே தேர்தெடுக்க வேண்டும் எனக் கூறி, தொலைப்பேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் கருத்து தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், பதிவான 21 லட்சம் வாக்குகளில் 93 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் மானுக்கு வாக்களித்துள்ளதாக கேஜரிவால் அறிவித்ததையடுத்து அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அப்போது இதுகுறுத்து பேசிய கேஜரிவால், "பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பது தெளிவாகிறது. முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர்தான் பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதல்வராக வருவார்" என்றார்.

ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆளும் காங்கிரஸுக்கு சவாலாக மாறியுள்ளது. 117 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாபில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மான் தலைமையிலான ஆம் ஆத்மி 20 இடங்களை கைபற்றி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com