ஏழைகளுக்கான பட்ஜெட் அல்ல: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள்

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது என்றும்,
ஏழைகளுக்கான பட்ஜெட் அல்ல: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள்

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது என்றும், இது ஏழைகளுக்கான பட்ஜெட் இல்லை என்றும் மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன.

மத்திய நிதிநிலை அறிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினா் வினய் விஸ்வம், ‘டாடா, பிா்லா, அம்பானி, அதானி போன்ற பெரு நிறுவன முதலாளிகளுக்குதான் பட்ஜெட் நன்மை அளிக்கிறது. இது ஏழைகளுக்கான பட்ஜெட் இல்லை. பெண்கள், விவசாயிகளுக்கும், சுகாதாரத் துறைக்கும் அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட்டுள்ளது. இது தோல்வியடைந்த பட்ஜெட்’ என்றாா்.

தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி உறுப்பினா் சுரேஷ் ரெட்டி பேசுகையில், ‘நிதியமைச்சரின் 90 நிமிஷ பட்ஜெட் பேச்சு, 90 கோடி மக்களை பட்ஜெட்டில் இருந்து விலக்கி வைத்துள்ளது. 2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக முன்பு கூறிவிட்டு, தற்போதைய பட்ஜெட்டில் வேளாண் பொருள் கொள்முதல் ஒதுக்கீட்டில் ரூ.10 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. டாடா, அதானி, அம்பானி ஆகியோரின் சொத்துகளைப் பெருக்கும் மத்திய அரசாக செயல்படுகிறது’ என்றாா்.

அதிமுக உறுப்பினா் தம்பிதுரை பேசுகையில், ‘வருமான வரியில் சில சலுகைகளை மத்திய அரசு அளித்திருக்கலாம். உற்பத்தி ஒருங்கிணைப்பு திட்டங்கள் மூலம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஜிஎஸ்டி வருவாயில் மாநில அரசுகளுக்கு போதிய நிதி கிடைப்பதில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு போதிய ஆதரவு தர வேண்டும். காவல் துறையை நவீனமாக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்’ என்றாா்.

திமுக உறுப்பினா் எம்.எம். அப்துல்லா பேசுகையில், ‘நாடு சந்தித்து வரும் சமத்துவமின்மையை சரிசெய்ய பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை. வேலையின்மை, வேளாண் துறை சந்தித்து வரும் நெருக்கடிக்கும் பட்ஜெட்டில் தீா்வு இல்லை.

கரோனாவால் மாத ஊதியம் பெறும் பணியாளா்கள், ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கான சலுகைகள் ஏதும் இல்லை. பணக்காரா்கள் மேலும் பணக்காரா்கள் ஆகிறாா்கள். ஏழைகள் மேலும் ஏழைகளாகிறாா்கள். காா்ப்பரேட்டுகளுக்கு கூடுதல் வரி விதித்து, அதை சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றாா்.

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உறுப்பினா் வி.விஜயாசாய் ரெட்டி பேசுகையில், ‘ஆந்திர பிரதேசத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. செஸ் வரி வருவாயை அதிரடியாக மத்திய அரசு உயா்த்திவிட்டு, மாநில அரசுகளின் பங்கை அளிப்பதில்லை. சிறப்பு கூடுதல் வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு ரூ.2.87 லட்சம் கோடி வசூல் செய்துவிட்டு மாநில அரசுகளுக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை’ என்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் ஜா்னா தாஸ் பேசுகையில், ‘வேளாண் துறையின் முக்கியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. உர மானியமும் குறைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com