வீட்டு வாடகை செலுத்தாத சோனியா காந்தி...ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்

தில்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி வசிக்கும் வீட்டிற்கு 4,610 ரூபாய் வீட்டு வாடகை பாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்பட அக்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் தாங்கள் வசித்துவரும் வீட்டிற்கு வாடகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

சுஜித் படேல் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பல வீடுகளின் வாடகை தொகை பாக்கி் இருப்பதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம், "தில்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் கட்டிடத்திற்கான வாடகை தொகை 12 லட்சத்து 69 ஆயிரத்து 902 ரூபாய் பாக்கி உள்ளது. கடைசியாக, கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாடகை செலுத்தப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல, தில்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி வசிக்கும் வீட்டிற்கு 4,610 ரூபாய் வீட்டு வாடகை பாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. கடைசியாக, கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாடகை செலுத்தப்பட்டுள்ளது.

புது தில்லி சாணக்யபுரியில் உள்ள சி-II/109 எண் வீட்டில் தங்கியுள்ள 
சோனியா காந்தியின் தனி செயலாளரான வின்சென்ட் ஜார்ஜ், 5 லட்சத்து 7 ஆயிரத்து 911 ரூபாய் வாடகை தொகை பாக்கி வைத்துள்ளார். அவர் கடைசியாக, கடந்த 2013ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வாடகை செலுத்தியுள்ளார்.

வீட்டு வசதித்துறை விதிகளின்படி, தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகள், தங்களின் கட்சிகளுக்கு என புதிய அலுவலகங்கள் கட்டிக் கொள்ள மூன்றாண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகு, அவர்கள் வசித்துவரும் அரசு பங்களாக்களை அவர்கள் காலி செய்ய வேண்டும்.

அந்த வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம், காங்கிரஸ் கட்சிக்கு 9-ஏ ரூஸ் அவென்யூ ஒதுக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டுக்குள், அக்பர் சாலையில் உள்ள வீட்டையும் இரண்டுக்கும் மேற்பட்ட பங்களாக்களையும் காங்கிரஸ் கட்சி காலி செய்திருக்க வேண்டும். ஆனால், பல முறை அக்கட்சிக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம், லோதி சாலையில் உள்ள வீட்டை காலி செய்யுமாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதை கடுமையாக விமரிசித்த பாஜக தேசிய இளைஞரணி செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா, "தேர்தலில் தோல்வியடைந்த சோனியா காந்தியால் வீட்டு வாடகையை செலுத்த முடியவில்லை. அவரால் இப்போது மோசடி செய்ய முடியாது என்பது வெளிப்படையானது, ஆனால் அரசியல் வேறுபாடுகள் ஒருபுறம் இருக்க நான் ஒரு மனிதனாக அவருக்கு உதவ விரும்புகிறேன். நான் அவருக்காக பிரசாரத்தைத் தொடங்கினேன். அவரது கணக்கிற்கு 10 ரூபாய் அனுப்பினேன், அவருக்கு உதவுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com