சர்ச்சையை கிளப்பிய ஹிஜாப் விவகாரம்...அசத்தல் காரியத்தை செய்த அருணாச்சல பிரதேச பள்ளிகள்

வரும் கல்வியாண்டில், அனைத்து திங்கள்கிழமைகளிலும் பாரம்பரிய உடை அணிந்து வருவதற்கு மாணவர்களுக்கு அருணாச்சல பிரதேச பள்ளிகள் அனுமதி வழங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கர்நாகத்தில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாமா? வேண்டாமா? என்ற விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாரம்பரிய உடை அணிந்து வருவதற்கு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனுமதி வழங்கியுள்ளன.

2022-23 கல்வியாண்டில், அனைத்து திங்கள்கிழமைகளிலும் பாரம்பரிய உடை அணிந்து வருவதற்கு பழங்குடியின உள்பட பல்வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் அருணாச்சல பிரதேச பள்ளிகள் அனுமதி வழங்கியுள்ளது.

அருணாச்சல பிரதேச தனியார் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் நல சங்கத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில், 180க்கும் மேற்பட்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து பேசிய சங்கத்தின் துணை தலைவர் தார் ஜானி, "அருணாச்சலத்தில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மற்றும் துணை பழங்குடியினர் உள்ளனர். ஒவ்வொரு திங்கட்கிழமையும் பழங்குடியினர் உள்பட அனைத்து மாணவர்களும் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து பள்ளிக்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளோம். இது அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சமூக வேறுபாடுகள் இன்றி மாணவர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிய சுதந்திரம் உண்டு. யாராவது நிஷியாக இருந்தால், அவர் நிஷி ஆடையை அணிவார். காலோக்கள் தங்கள் பாரம்பரிய உடையை அணிவார்கள். அதேபோல், பழங்குடியினர் அல்லாதவர்களும் தங்கள் பாரம்பரிய உடையை அணிய சுதந்திரம் உண்டு.

நிஷி மாணவர் சங்கம் இதற்கு முன்பு மாநில அரசிடம் இந்த பிரச்னையை எழுப்பியது. பெற்றோர்களில் ஒரு சிலர் இதை செயல்படுத்த வேண்டும் என்று விரும்பினர். பெரும்பாலான பெற்றோர்கள் மாணவர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை வாரத்திற்கு ஒரு முறை அணிய வேண்டும் என்று பரிந்துரைத்தனர். 

இந்த முடிவு உள்ளூர் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்த பங்களிக்கும். இந்த முடிவை பின்பற்றாத பள்ளிகள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்கும். பல்வேறு சமூக மாணவர்கள் படிக்கும் கல்வி நிலையங்களின் சீருடைகளில் எந்த ஒரு மதத்தின் அடையாளமும் பிரதிபலிக்கக் கூடாது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com