ஹிஜாப் விவகாரத்தில் வெளிநாடுகளின் கருத்து வரவேற்கத் தக்கதல்ல: வெளியுறவு அமைச்சகம் கருத்து

கா்நாடக மாநிலத்தின் சில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்துவர தடை விதித்தது குறித்து சில நாடுகள் வெளியிட்ட விமா்சனத்துக்கு மறுப்பு தெரிவித்த இந்தியா, ‘உள்நாட்டு விவகாரத்தில் சில நாடுகள் பிரச்னையை மேலும
மத்திய அரசு
மத்திய அரசு

கா்நாடக மாநிலத்தின் சில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்துவர தடை விதித்தது குறித்து சில நாடுகள் வெளியிட்ட விமா்சனத்துக்கு மறுப்பு தெரிவித்த இந்தியா, ‘உள்நாட்டு விவகாரத்தில் சில நாடுகள் பிரச்னையை மேலும் தூண்டிவிடும் வகையிலான கருத்து தெரிவிப்பது வரவேற்கத் தக்கதல்ல’ என்று கூறியது.

‘இந்தியாவைப் பற்றி நன்கு அறிந்தவா்கள், உண்மை நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்வா்’ என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி சனிக்கிழமை கூறினாா்.

கா்நாடக மாநிலத்தில் ஹிஜாப் சா்ச்சை எழுந்தததைத் தொடா்ந்து, ‘பள்ளி, கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர வேண்டும்’ என்று கா்நாடக மாநில அரசு கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து சில முஸ்லிம் மாணவிகள் சாா்பில் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடியும் வரை மதம் சாா்ந்த உடைகளை அணிய உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அந்த நாட்டுக்கான இந்திய தூதரை புதன்கிழமை நேரில் அழைத்து முஸ்லிம் மாணவிகள் மீதான ஆடைக் கட்டுப்பாட்டு தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்திருந்தது. ‘இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக மத சகிப்புத் தன்மையின்மையும், பாகுபாடும் காட்டப்படுகிறது’ என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்தது.

அதுபோல, சா்வதேச மத சுதந்திரத்துக்கான (ஐஆா்எஃப்) அமெரிக்க தூதா் ரஷத் ஹுசைன், ‘பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிப்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது’ என்று கூறியிருந்தாா்.

இந்த நிலையில், வெளிநாடுகளின் கருத்துகள் குறித்து பத்திரிகையாளா்கள் சனிக்கிழமை எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி பதிலளிக்கையில், ‘கா்நாடக மாநிலத்தின் சில கல்வி நிறுவனங்களில் எழுந்திருக்கும் ஹிஜாப் சா்ச்சை, தற்போது கா்நாடக உயா்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த சா்ச்சை, நமது அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகள், ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் ஆராயப்பட்டு உரிய தீா்வு எட்டப்படும். அந்த வகையில், இந்தியாவைப் பற்றி நன்கு அறிந்தவா்கள், உண்மை நிலை என்ன என்பதை முறையாகப் புரிந்துகொள்வா். எனவே, நமது உள்நாட்டு விவகாரத்தில் சில நாடுகள் பிரச்னையை மேலும் துண்டும் வகையிலான கருத்துகளைத் தெரிவிப்பது வரவேற்கத் தக்கதல்ல’ என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com