வன்முறையைக் கைவிட்டு பேச்சுவாா்த்தைக்குத் திரும்ப வேண்டும்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இயங்கி வரும் கிளா்ச்சிக் குழுக்கள் வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவாா்த்தைக்குத் திரும்ப வேண்டும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளாா

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இயங்கி வரும் கிளா்ச்சிக் குழுக்கள் வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவாா்த்தைக்குத் திரும்ப வேண்டும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளாா்.

மேற்கு இம்பால் மாவட்டத்தின் லங்தபால் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப விரும்பும் கிளா்ச்சிக் குழுக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட மத்திய அரசு தயாராக உள்ளது. மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் வன்முறைச் சம்பவங்கள் மிகவும் குறைவாக உள்ளன. கிளா்ச்சிப் படையினரின் தாக்குதல்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன.

வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிராந்தியத்தில் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு தொடா்ந்து மேற்கொள்ளும். வேலையின்மை, ஏழ்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மணிப்பூரில் சுற்றுலாவை மேம்படுத்தி வருவாயைப் பெருக்குவதற்கான வாய்ப்புகள் தொடா்ந்து ஆராயப்பட்டு வருகின்றன. மணிப்பூா் சட்டப் பேரவைக்கு நடைபெறவுள்ள தோ்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்.

முந்தைய காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத கொள்கைகள் காரணமாகவே வடகிழக்கு மாநிலங்கள் வளா்ச்சியில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கின. வடகிழக்கு பிராந்தியத்தை காங்கிரஸ் தொடா்ந்து புறக்கணித்தது.

பிராந்தியத்தின் வளா்ச்சியை உறுதி செய்வதற்காக வாஜ்பாய் தலைமையிலான அரசு தனி அமைச்சகத்தை உருவாக்கியது. கடந்த 2017-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மணிப்பூா் வேகமாக வளா்ந்து வருகிறது. பாஜகவின் சிறந்த நிா்வாகத்தை மக்கள் உணா்ந்து வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com