திருமணத்துக்கு வந்த 13 பெண்கள் கிணற்றில் விழுந்து பலியான சோகம்: நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த 13 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை கிணற்றில் தவறி விழுந்து பலியான நிலையில், அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.
திருமணத்துக்கு வந்த 13 பெண்கள் கிணற்றில் விழுந்து பலியான சோகம்: நடந்தது என்ன?
திருமணத்துக்கு வந்த 13 பெண்கள் கிணற்றில் விழுந்து பலியான சோகம்: நடந்தது என்ன?


குஷிநகர்: உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த 13 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை கிணற்றில் தவறி விழுந்து பலியான நிலையில், அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.

திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள், புதன்கிழஐம இரவு, மணமக்கள் வீட்டிலிருந்த பழைய கிணற்றின் மீது போடப்பட்டிருந்த இரும்பு மூடி மீது அமர்ந்திருந்த போது அது இடிந்து விழுந்து நேரிட்ட இந்த சம்பவத்தில் மேலும் 10 பேர் காயமடைந்தனர். 

மணமகனின் தந்தை பரமேண்வர் குஷ்வாஹா இது பற்றி கூறுகையில், திருமணத்துக்கு முன்பு மத்கோர்பா என்ற சடங்கை செய்வது வழக்கம். இது பெண்கள் மட்டும் செய்யும் சடங்கு. இந்த சடங்கின் போது கிணற்றில் இருந்த இரும்பு பலகை மேல் ஏராளமான பெண்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அது திடீரென இடிந்து விபந்துள்ளது.

அந்த கிணறு பயன்படுத்தாத பழைய கிணறு. அதன் மீது இரும்புப் பலகை போடப்பட்டிருந்தது. நிறைய பேர் அதன் மீது அமர்ந்ததால் பாரம் தாங்காமல் இந்த சம்பவம் நேரிட்டது. 

இந்த விபத்தினால், எனது இதயமே நொறுங்கிவிட்டது. நான் என் மகனின் திருமணத்துக்குக் கூடச் செல்லப்போவதில்லை. மகனை மட்டும் அனுப்பி எளிய முறையில் திருமணத்தை செய்து கொண்டு வரச் சொல்லிவிட்டேன் என்கிறார்.

கிணற்றில் விழுந்து பலியானவர்களின் உடல்கள் வியாழக்கிழமை அந்த கிராமத்திலேயே எரியூட்டப்பட்டது.  

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவலர்கள் கிணற்றுக்குள் விழுந்த சுமார் 23 பேரை வெளியே எடுத்தனர். அவர்களில் 13 பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.  ஆனால், மணமகன் வீட்டைச் சேர்ந்த யாரும் இந்த சம்பவத்தில் பலியாகவில்லை. அவரது பேத்தி கிணற்றுக்குள் விழுந்த நிலையில், அவர் உயிருடன் மீட்கப்பட்டார். 

கிணற்றில் விழுந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண் இது குறித்து கூறுகையில், நாங்கள் ஆடியும் பாடியும் உற்சாகமாக இருந்தோம். ஆனால், திடீரென இரும்பு பலகை இடிந்து விழுந்தது. நானும் அதிலேயே விழுந்துவிட்டேன்.  எப்படியோ என்னை மேலே தூக்கி காப்பாற்றிவிட்டார்கள்.

இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் வரை உயிரிழந்த சோகமும் நடந்துள்ளது. இந்த பழடைந்த கிணறு சுமார் 70 ஆண்டுகள் பழமையானது என்று தெரிய வந்துள்ளது.

வழக்கமாக இந்த கிராமத்தில் நடைபெறும் திருமணத்தின் போது, இந்த கிணற்றுக்கு அருகே தான் இந்தச் சடங்கை செய்வது வழக்கம். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிணறு பலகை போட்டு மூடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com