கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய போராடிய 6 மாணவிகள் எங்கே?

கர்நாடக மாநிலம் உடுப்பியில், ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வருவது தங்களது உரிமை என்று போராடிய 6 பெண்களும் கல்லூரிக்கு வராமல் தவிர்த்து வருகிறார்கள். 
கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய போராடிய 6 மாணவிகள் எங்கே?
கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய போராடிய 6 மாணவிகள் எங்கே?

மங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பியில், ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வருவது தங்களது உரிமை என்று போராடிய 6 பெண்களும் கல்லூரிக்கு வராமல் தவிர்த்து வருகிறார்கள். 

ஹிஜாப் விவகாரத்தால் கல்லூரிகள் மூடப்பட்டு ஒரு வாரத்துக்குப் பிறகு திறக்கப்பட்டும், இதுவரை அவர்கள் கல்லூரிக்கும் வரவில்லை, ஹிஜாப் விவகாரம் மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர்களைப் பற்றிய தகவல்களும் தெரியவரவில்லை.

உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை அவர்கள் காத்திருக்கப் போவதாகவும், அதன்பிறகு வகுப்புகளுக்கு வருவது குறித்து முடிவு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கா்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாகவே ஹிஜாப் தொடா்பான சா்ச்சை கல்லூரி மாணவா்களிடையே காணப்படுகிறது. உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிய பள்ளி நிா்வாகம் தடை விதித்தது. அதனை மீறி ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகள் 6 பேரை கல்லூரியில் இருந்து கல்லூரி முதல்வா் வெளியேற்றினாா். அதைத் தொடா்ந்து, கல்லூரி வளாகத்துக்கு வெளியே முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினா். பதிலுக்கு ஹிந்து மாணவா்கள் காவித்துண்டை அணிந்துகொண்டு கல்லூரிக்கு வந்தனா்.

இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்க விரும்பிய கா்நாடக அரசு, பள்ளி, கல்லூரி வளாகங்களில் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்று பிப். 5-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியதால், மேலும், கா்நாடகத்தில் உள்ள உயா்நிலைப் பள்ளிகள், பி.யூ. கல்லூரிகள், முதல்நிலை கல்லூரிகள் அனைத்துக்கும் பிப். 9-ஆம் தேதிமுதல் 11-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயா்நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் சீருடையை மட்டும் அணிய வேண்டும் என்ற கா்நாடக அரசின் உத்தரவை எதிா்த்தும், ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரியும், குந்தாபுரா அரசு பி.யூ. கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள், கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் முன்பு செவ்வாய்க்கிழமை துவங்கிய இந்த மனு மீதான விசாரணை, இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதி மறுத்தாா். ஹிஜாப் தொடா்பான அனைத்து மனுக்களையும் விசாரிக்க கூடுதல் அமா்வு அமைப்பதற்கு வசதியாக இந்த வழக்கை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்திக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

அதன்படி, கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித்,  நீதிபதி காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோர் அடங்கிய கூடுதல் அமர்வு அமைக்கப்பட்டது.

ஹிஜாப் தொடர்பாக முஸ்லிம் மாணவிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த 7 மனுக்கள், 2 இடைசேர்ப்பு மனுக்களை இந்தக் கூடுதல் அமர்வு கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் தேவதத் காமத், சஞ்சய் ஹெக்டே ஆகியோர் வாதிட்டனர். ஹிஜாப் அணிந்துகொண்டு கல்லூரிகளுக்கு வருகை தர மாணவிகளுக்கு அனுமதிஅளிக்குமாறு அவர்கள் கோரினர். 

""ஹிஜாப் அணிவது மத நம்பிக்கையின் ஒரு பகுதி என்பதால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19(1)(ஏ)-இன்படி ஹிஜாப் அணிவது தனிப்பட்ட உரிமை. எனவே, ஹிஜாப் அணிவதற்கு சீருடை சட்டம் தடையாக இருக்க முடியாது'' என்று அவர்கள் வாதிட்டனர்.

அரசு தலைமை வழக்குரைஞர் பிரபுலிங் கே.நவடகி வாதிடுகையில், "ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால், பள்ளிகள், கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராவதற்கான முன்னேற்பாடுகள் நடந்துள்ளன. சீருடை தொடர்பாக அரசு புதிய ஆணை எதையும் பிறப்பிக்கவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என்பதே மாநில மக்களின் விருப்பம்' என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி வாய்மொழியாகக் கூறிய உத்தரவில் குறிப்பிட்டிருப்பதாவது:

மாநிலத்தில் அமைதியும் நிம்மதியும் திரும்ப வேண்டும். கல்வி நிறுவனங்களைத் திறக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளுக்கு மத அடையாளங்களுடன் வருமாறு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது. கல்விப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். 

நீதிமன்றத்தின் முன்பாக இருக்கும் வழக்கை விரைவாக விசாரிக்க உள்ளோம். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஏற்பாடு செய்யப்படும். எவ்விதத் தொந்தரவும் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும். 
இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரையில், தற்போதைக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஹிஜாப் அல்லது காவித்துண்டு போன்றவற்றை அணிந்துகொண்டு மாணவர்கள் வரக் கூடாது என்று இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com